மக்களிடையே மத வெறுப்பை துண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு எதிராக காவல்துறையில் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூர், “லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களை இது போன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள்.
ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்திருங்கள். அந்த கத்தியை கொண்டு காய்கறிகளை வெட்ட முடியும் என்றால் எதிரிகளின் தலையையும், வாயையும் கூட வெட்ட முடியும். எப்போது என்ன நடக்கும் என தெரியாது. தற்காப்புக்கான உரிமை இருக்கிறது.
ஆகையால் வீட்டில் யாரேனும் அத்துமீறி ஊடுறுவினால் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுக்க வேண்டும்” என ஆவேசமாக பேசியிருக்கிறார். பிரக்யா சிங்கின் இந்த பேச்சுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகாய் ஷிவமோகா காவல் கண்காணிப்பாளரிடம், வெவ்வேறு சமூகத்தினரிடையே வன்முறையை, வெறுப்பை தூண்டும் விதமாகவும், ஆத்திரமூட்டும் கருத்துகளையும் பேசியிருக்கிறார்.
ஆயுதங்களை பயன்படுத்துவதை ஆதரிப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கிஅ சீர்குலைப்பதை அவர் ஊக்குவிக்கிறார். ஆகையால் பிரக்யா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்திருக்கிறார். இதுபோக பிரக்யா சிங்கின் இந்த வெறுப்பு பேச்சு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.