“தப்லிக் ஜமாஅத்தில்  பங்கேற்றவர்கள் பற்றிய பாஜக எம்பியின் கருத்து போலியானது” - துணை ஆணையர்

“தப்லிக் ஜமாஅத்தில்  பங்கேற்றவர்கள் பற்றிய பாஜக எம்பியின் கருத்து போலியானது” - துணை ஆணையர்
“தப்லிக் ஜமாஅத்தில்  பங்கேற்றவர்கள் பற்றிய பாஜக எம்பியின் கருத்து போலியானது” - துணை ஆணையர்
Published on
பெலகாவி மருத்துவமனை ஊழியர்களிடம் டெல்லி தப்லிக் ஜமாஅத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்பி வருவதாகவும் பாஜக எம்.பி. கூறிய கருத்து உண்மையில்லை என்று  துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடில்லியில் உள்ள தப்லிக் ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சிலரை,  தனிமைப்படுத்த வேண்டி  அழைத்துச் செல்ல வந்த  சுகாதாரப் பணியாளர்களிடம் தப்லிக் ஆட்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர்களில் சிலர் மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாமல் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதாகவும் பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே நேற்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். 
தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வார்டு போல் தோன்றும் ஒரு வீடியோவையும் ஷோபா ட்வீட் செய்திருந்தார். அதில் ஒரு நபர் லேசாக கைகளை அசைத்துக் காட்டுவதைப் போன்ற காட்சிப் பதிவாகியிருந்தது. அப்போது அந்த நபருக்கு வேண்டியவர்கள் வெளியே இருந்து ஜன்னல் வழியே நலம் விசாரித்து விட்டுச் செல்கின்றனர். இந்த வீடியோ பதிவை வைத்துதான் பாஜக எம்பி குற்றஞ்சாட்டி இருந்தார். 
ஷோபா  வெளியிட்டிருந்த பதிவில் "பெலகாவியைச் சேர்ந்த 70 பேர் நிஜாமுதீன் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 8 பேருக்கு கொரோனா பாசிடிவ்  சோதனை செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில், தப்லிக் அங்கத்தினர் சுகாதார ஊழியர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள், எல்லா இடங்களிலும் துப்புகிறார்கள். ஆடுகிறார்கள். தப்லிக் ஜமாஅத்தின் நோக்கங்களைத் தேசம் அறிய விரும்புகிறது” எனக் கூறியிருந்தார். உடனே இவரது கருத்து கவனம் பெற்றது. அதனையடுத்து சில சர்ச்சைகள் எழுப்பின.  
இந்நிலையில் இவரது இந்தக் கூற்றை பெலகாவி துணை ஆணையர் எஸ்பி பொம்மனஹள்ளி மறுத்துள்ளார். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் சுகாதார ஊழியர்கள்  பணிசெய்யும்  இடங்களில் துப்பவோ அல்லது தவறாக நடந்து கொள்ளவோ இல்லை என்று கூறியுள்ளார். 
இதனிடையே இது குறித்து பெலகாவி மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் வினய் பாஸ்டிகோப்  விரிவான பதில் அளித்துள்ளார். அதன் மூலம் மார்ச் மாதம் தப்லிக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்களில்  33 பேர் மட்டுமே இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், சோதனையில் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்ட  மூன்று பேர் தனித்தனியான  வார்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com