ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இங்கு பாஜக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பரப்புரையின்போது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திற்கும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.
குறிப்பாக தேர்தல் பரப்புரையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான வி.கே.பாண்டியனின் பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, ”ஒரு தமிழர் ஒடிசாவை ஆளலாமா” என விமர்சனத்தை வைத்து பரப்புரையில் ஈடுபட்டது.
மேலும், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்தும் கேள்வி எழுப்பியது. முடிவில் பாஜக இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி அம்மாநிலத்தில் நீண்டகால முதல்வராக இருந்த நவீன்பட்நாயக்கின் அரியாசனத்தைத் தகர்த்தது. மொத்தமிருந்த 147 தொகுதிகளில் 78 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில்தான், அம்மாநிலத்தில் பாஜக சார்பாக முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநில முதலமைச்சராக பாஜகவின் மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் நடைபெற்ற பாஜக எம்.எல். ஏக்கள் கூட்டத்தில் மோகன் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா மாநிலத்தில் புதிய முதலமைச்சர் பதவியேற்க உள்ளார்.
மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் போன்றோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்றிருந்தனர். இரு மூத்த தலைவர்களுக்கு மத்தியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன் சரண் மஜியை தங்களது முதலமைச்சராக தேர்வு செய்துள்ளனர்.
மோகன் சரண் மஜி நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவர் தான் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியில் ஏறத்தாழ 87 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.