கடந்த ஏப்ரல் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில், சமீபகாலமாக இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பும், பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், வீடுகளில் இருந்த 9 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும், இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாம்பெல் பகுதியில் உள்ள குக்கி இனத்தைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சர் நேம்சா கிப்ஜெனின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.
தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி மாலையும் மீண்டும் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையில் சென்ற போலீசாருக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பும் அனுப்பப்பட்டு இருந்தது.
இதற்கிடையே அன்றைய தினம் இரவே பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், தொங்ஜு என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது.
மணிப்பூரில் வெடித்துள்ள மோதலுக்கு பாஜக அரசே காரணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வன்முறை சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தோக்சோம் ராதேஷ்யம், ”மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமரிடம் பேச இருக்கிறோம். அதற்கான நேரத்தைக் கேட்டிருக்கிறோம். பிரதமர் அழைப்புக்காக காத்திருக்கிறோம். மோதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூரில் விரைவில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மணிப்பூரில் பொருளாதாரமும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் நெருங்கி வருவதால் நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பதை மத்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 10 அரசியல் கட்சிகளின் (MPCC, JD(U), கம்யூனிஸ்ட் கட்சி, AITC, AAP, AIFB மணிப்பூர், NCP மணிப்பூர், சிவசேனா மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி) பிரதிநிதிகள் குழு டெல்லியில் முகாமிட்டு, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்து மணிப்பூரில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விளக்கியிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீடு தொடர்பாக மணிப்பூரில் ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது.