“முஸ்லிம் கடைகளில் காய்கறி வாங்காதீர்கள்” - உபி எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

“முஸ்லிம் கடைகளில் காய்கறி வாங்காதீர்கள்” - உபி எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு
“முஸ்லிம் கடைகளில் காய்கறி வாங்காதீர்கள்” - உபி எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு
Published on
 கொரோனாவை தடுப்பதற்காக முஸ்லிம் கடைகளில் காய்கறிகளை வாங்க வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் நாட்டில் 80 சதவிகித மக்களின் நடமாட்டம் குறைந்து விட்டதாகக் கூகுள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட அஞ்சி, வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் முஸ்லிம் மக்கள் நடத்தும் காய்கறி கடைகளில் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் எச்சரிக்கும்படி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி  சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் திவாரி,  பேசும்  14 வினாடி வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. 
 
 
அதில் அவர்,  “ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். நான் எல்லோரிடமும் வெளிப்படையாகச் சொல்கிறேன். 'மியாகளிடமிருந்து' காய்கறிகளை வாங்க வேண்டாம்” என்கிறார். மியா என்றால் முஸ்லிம்கள் என்று அர்த்தம்.  இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர்களைப் பற்றி அவர் ஒரு  எச்சரிக்கை குறிப்பைக் கொடுத்துள்ளார்.
 
 
இது தொடர்பான செய்தியை ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து திவாரியை தொடர்பு கொண்டு இவர்களின் செய்தியாளர் பேசியுள்ளார். அப்போது, திவாரி இந்தக் கருத்தைத் தெரிவித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஆபத்தான வைரஸை பரப்புவதில் தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் பங்கு குறித்து மக்கள் அவரிடம் புகார் அளித்ததாகவும் அதனையடுத்து, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் இதனைப் பரிந்துரைத்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும் இந்த விவகாரம் இப்போது உத்திரப் பிரதேச அரசியலில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com