மத்திய அரசையும் பாஜக தலைமையையும் விமர்சித்து வரும் சத்ருகன் சின்ஹாவின் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா. பீகார் மாநிலம், பாட்னா தொகுதி பா.ஜ. எம்.பி.யான அவர், பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் கூட, ‘மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான நேரம் வந்தாகி விட்டது; புதிய தலைமை வரவேண்டும் என்று நினைக்க வில்லையா?’ என்று கேட்டிருந்தார். இது பரபரப்பானது.
இந்நிலையில், தொடர்ந்து பாஜக தலைமை மீது எதிர்ப்பு தெரிவித்து வரும் அவரை கழற்றிவிட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத் தேர்தலில் அவரது பாட்னா சாகிப் தொகுதியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத், இப்போது பீகார் மாநில மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதற்கிடையே சத்ருகன் சின்ஹா, அவரது தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
பாட்னா தொகுதியில் கயஸ்தா என்ற சமூகத்தினர் அதிகம். வெற்றியை நிர்ணயிப்பது இவர்கள் ஓட்டுகள் தான். ரவிசங்கரும் சின்காவும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சின்காவை தோற்கடிக்க ரவிசங்கரை பாஜக களமிறக்குவதாகக் கூறப்படுகிறது.