இலவசத்துக்கு எதிராக பேசும் பாஜக, தேர்தலில் ஏன் இலவசங்களை அள்ளிவீசுகிறது? இரட்டை வேடம் போடுகிறதா?

இலவசத்துக்கு எதிராகப் பேசும் பாஜக, ஏன் தன் தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அள்ளி வீசுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
model image
model imagefreepik, twitter
Published on

கடந்த ஆண்டு தொடங்கிய இலவச விவாதம்

கடந்த ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் எனச் சிலர் கருதுகிறார்கள். இந்திய அரசியலிலிருந்து இலவச திட்டக் கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே, ”நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்று பிரதமர் மோடி ஜூலை மாதம் நிகழ்ச்சி ஒன்றில் விவாதத்தைத் தொடங்கிவைத்திருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிTwitter

தொடர்ந்து அவர் மட்டுமல்ல, பாஜகவினரும் இலவசத்திற்கு எதிராகக் கொடுத்து வந்தனர். மேலும், இலவசம் தொடர்பாக பாஜக சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ’தேர்தலின்போது இலவசங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதையும் படிக்க: ”பலர் சேவாக் என நினைக்கலாம் ; எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் எம்.எஸ்.தோனி தான்” - கவுதம் கம்பீர்

பாஜகவின் இலவசத்துக்கு எதிராக விவாதங்கள்

அதேநேரத்தில், பாஜகவின் இந்த இலவசம் குறித்த பேச்சுக்கு எதிராக விவாதங்களும் எழுந்தன. குறிப்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் சில தலைவர்களும் பாஜகவின் இலவசம் தொடர்பான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ’பொதுமக்களுக்கான சமூகநலத் திட்டங்களை இலவசம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக்கூடாது. இதை ஏழை மக்களிடையே நடைபெறும் பொருளாதார புரட்சி என்றே கருத வேண்டும்’ எனப் பலரும் கருத்து கூறினர்.

கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை
கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை

இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வந்த நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இலவசத்தை எதிர்க்கும் பாஜக, அம்மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால், இதுகுறித்து பாஜகவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதேநேரத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: "ஃபைனலில் நீங்க என்ன செஞ்சீங்க? அந்த நாளுக்காகதான் எல்லா நடக்குது" கைஃப்-க்கு வார்னர் கொடுத்த ரிப்ளை

கர்நாடகாவில் இலவசங்களை அள்ளித் தெளித்த பாஜக

இந்த நிலையில் நடப்பாண்டில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திமுக ஃபார்முலாவைக் கையிலெடுத்து இலவசமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது. அப்போதுகூட, கர்நாடகாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய பாஜக தொண்டர்களுடன் காணொளி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, “நமது நாட்டில் சில அரசியல் கட்சிகள் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரத்துக்கு வர துடிக்கின்றன. அதற்காக எல்லா வகையான குறுக்குவழிகளையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்து கவலை இல்லை.

மோடி
மோடிட்விட்டர்

இலவச திட்டங்களையும், இலவசப் பொருட்களையும் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலாவதி ஆகிவிடுகின்றன. இலவசமாக பொருட்கள் வழங்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். நாட்டு மக்கள் இதற்கு ஒரு முடிவை கட்ட வேண்டும்” எனப் பேசியிருந்தார். இப்படி, இலவசத்துக்கு எதிராக மீண்டும் பேசிய பிரதமரின் அங்கம் வகிக்கும் பாஜகவே, கர்நாடகத் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது. எனினும், பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், இலவசம் கொடுத்த கருத்துகள் மீண்டும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பின.

இதையும் படிக்க: உ.பி.: “பாலியல் வழக்கைத் திரும்பப் பெறு” - மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

இலவசத்தில் பாஜக போடும் இரட்டை வேடம்!

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் சமூக நலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கடுமையாக விமர்சித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்PT Desk

இந்த நிலையில், இலவசத்தை எதிர்த்த அதே பாஜகதான், தற்போது நடைபெறும் 5 மாநில (சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா) சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இலவசத்தை வாரி வழங்கியுள்ளது. அதிலும் ஒரு பெரிய அறிவிப்பாக, தெலங்கானாவில் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பாஜக இலவச தரிசனம் வழங்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவே வாக்குறுதி அளித்துள்ளார். இதே வாக்குறுதியை மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்வைத்துள்ளார். இதுதவிர, ஏராளமான இலவசங்கள் மாநில தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸுக்குப் போட்டியாக பாஜகவால் ஏகப்பட்ட அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: 5 லட்சத்திற்கும் அதிக நட்சத்திரங்கள்.. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த செம புகைப்படம்!

வாக்குகளை விரும்புவதற்காக இலவசங்களை அறிவிக்கும் பாஜக

இதனால் மீண்டும் மீண்டும் இலவசம் குறித்த பார்வையில் பாஜவின் இரட்டை வேடம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆம், ’மக்களின் வாக்குகளை விரும்பும்போது மட்டுமே பாஜகவுக்கு இலவசம் தேவைப்படுகிறது’ என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. மேலும் ‘இலவசத்தை ஒழிக்க வேண்டும் எனக் குரல் எழுப்பிய பாஜகவால், தற்போது அறிவிக்கும் இலவசங்களால் தேசத்துக்கு பாதிப்பு ஏற்படாதா?’ எனவும் அவைகள் கேள்வி கேட்டுள்ளன. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாத் தந்திரங்களையும் எல்லாக் கட்சிகளும் கையிலெடுக்கின்றன.

I-N-D-I-A கூட்டணி
I-N-D-I-A கூட்டணிட்விட்டர்

மேலும், ‘இடையில் மட்டும் ஏன் வேடம் போட வேண்டும்’ என்பதே அவர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது. தவிர, ‘ஒரு முடிவைத் தீர்க்கமாக எடுத்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்க வேண்டிய அவசியம் என்ன? இலவசத்தை வெறுப்பவர்கள், கடைசிவரை அதற்கு எதிராக இருக்க வேண்டியதுதானே? சொல்வது ஒன்றும், செய்வது மற்றொன்றுமாக இருந்தால் உண்மையில் இது, இரட்டை வேடம்தானே, மக்களை ஏமாற்றும் செயல்தானே’ என எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: ராஜஸ்தான்: முடிவுக்கு வந்த அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல்.. வியூகம் வகுத்த ராகுல்.. நடந்தது என்ன?

”இலவசங்கள் உண்மையில் இலவசமாகக் கிடைப்பதில்லை”

கடந்த ஆண்டு இலவசங்கள் பற்றிய விமர்சனங்களும் நாடு முழுவதும் பேசுபொருளாகிய நிலையில் அப்போது பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டியளித்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல், “இலவசங்கள் உண்மையில் உங்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. அரசாங்கங்கள் இலவசங்களை வழங்கும்போது எங்காவது ஒரு செலவு விதிக்கப்படுகிறது, ஆனால், இது திறனை வளர்க்கும் பொது பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு செலவாகும். உதாரணமாக, மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அத்தகைய மானியங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவை அதிகரிக்கிறது.

அசீமா கோயல்
அசீமா கோயல்

பஞ்சாப்பில் இலவச மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம். இதுபோன்ற இலவசங்கள் கண்ணுக்குத் தெரியாத பெரிய பாதிப்புகளை நாம் சுமக்க வேண்டியுள்ளது. ஆக, அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கும் ஒரு விலை உள்ளது. பெரும்பாலான நிதிகள் இலவசங்களுக்கு செலவிடப்படுவதால் மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சுகாதாரம், கல்வி, காற்று மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. இதனால் ஏழைகளே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதனால் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும்போது, அதற்கான நிதியாதாரம் எங்கிருந்து வரும் என்பதை வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும். இதனால் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும்" எனக் கூறியிருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், இலவசத்துக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், “இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம்தானே. அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்” என அவர் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அர்ஜென்டினா: வாக்குறுதிகளை அள்ளிவீசி அதிபரான வலதுசாரி ஆதரவாளர்..கணிப்புகளை பொய்யாக்கிய ஜேவியர் மிலே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com