இடைத்தேர்தல் நடைபெற்ற பல மாநிலங்களில் பாஜகவே முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற மற்ற மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 8 தொகுதிகளிலுமே பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல கர்நாடாகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டிலும் தற்போது வரை பாஜகவே முன்னிலை வகிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறார்.
இதேபோல ஜார்க்கண்ட்டில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கும் பாஜகவின் கையே ஓங்கி இருக்கிறது.
மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் ஒரு தொகுதியில் வெற்றி கண்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். தெலங்கானாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலும் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகிக்கிறது.
இதனிடையே சத்தீஸ்கர், ஹரியானாவில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்ட்டில் இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.