மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தமிழகத்திற்கு வர உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை தமிழகம், மேற்கு வங்கம், ஒதிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக தொகுதிகளை வெல்ல அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மதுரைக்கும் திருப்பூருக்கும் வந்து சென்றுள்ளார். வரும் 1ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். இதற்கிடையில் பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா ஈரோடு வர உள்ளார். கட்சியினரை சந்திக்க மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி திருவண்ணாமலைக்கும் ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கும் வர உள்ளனர். தமிழகத்திற்கு பாரதிய ஜனதா கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதையே இது காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு வட மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்று குறிப்பிடும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், இதை சரிக்கட்டவே தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக தொகுதிகளை வெல்ல பாரதிய ஜனதா முனைப்பு காட்டுவதாகவும் கூறுகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது, பிரியங்கா காந்தியின் திடீர் அரசியல் வருகை என பல புதிய சவால்களை பாரதிய ஜனதா எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் அரசியல் வியூகம் எந்தளவு பலன் தரும் என்பது தேர்தல் முடிவுகளின் போதே தெரிய வரும்.