CAA: அதிகமாய் குடியேறிய வங்கதேசிகள்..எதிர்க்கும் 2 மாநிலங்கள்..அரசியல் ஆதாயம் தேடும் பாஜக? ஓர் அலசல்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.
சிஏஏ, மேற்கு வங்கம், அசாம்
சிஏஏ, மேற்கு வங்கம், அசாம்ட்விட்டர்
Published on

வங்கதேச எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்தியா!

தெற்காசியாவில் உள்ள நாடுகளில் ஒன்று வங்கதேசம். இது, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 1971இல், இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு வங்கதேசம் சுதந்திரமடைந்தது. 1974 இல் இந்தியாவும் வங்கதேசமும் ஓர் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியாவும் வங்கதேசமும் 4,096.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் நீண்ட சர்வதேச எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. வங்கதேசத்துடனான இந்தியாவின் சர்வதேச எல்லை 1947இல் ராட்கிளிஃப் கோட்டால் வரையப்பட்டது. இந்த எல்லை இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் வழியாகச் செல்கிறது. இந்தியா - வங்கதேசம் எல்லையில் மலைகள், சமவெளி, காடுகள் மற்றும் ஆறுகள் என பலதரப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது. எனினும், 1990களில் இருந்து, இந்தியாவும் வங்கதேசமும் தங்கள் எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. 2015இல், இந்தியாவும் வங்காளதேசமும் தங்களின் 40 ஆண்டுகால நில எல்லைப் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டன.

வங்கதேச எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் 5 இந்திய மாநிலங்கள்

இந்த நிலையில், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேசத்துடனான சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இதில் மேற்கு வங்கம் வங்கதேசத்துடன் 2,217 கி.மீ. நீளமுள்ள சர்வதேச எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இது, உலகின் ஐந்தாவது மிக நீளமான எல்லை ஆகும். அசாம் மாநிலம் 267.5 கி.மீ நீளத்தைப் பகிர்ந்துகொள்கிறது. மேற்கு வங்காளத்தின் 23 மாவட்டங்களில் கூச் பெஹார், ஜல்பைகுரி, உத்தர் தினாஜ்பூர், தக்ஷின் தினாஜ்பூர், டார்ஜிலிங், மால்டா, நாடியா, முர்ஷிதாபாத், வடக்கு 24-பர்கானாஸ், தெற்கு 24-பர்கானாஸ் ஆகிய 10 மாவட்டங்கள் வங்கதேச எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த மாவட்டங்கள், மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களைக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இதில் வங்காளதேச எல்லையோர மாவட்டங்களில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களும் இந்த 50 கிமீ எல்லைக்குள் வருகின்றன.

சிஏஏ, மேற்கு வங்கம், அசாம்
“நீங்கள் இந்திய குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும்” - CAA, NRC, NPR குறித்து அச்சம் எழுவது ஏன்?

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு!

வங்கதேசத்தின் சர்வதேச எல்லைகளை நம்முடைய 5 மாநிலங்கள் பகிர்ந்துகொள்ளும் நிலையில், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடியுரிமை திருத்தச் சட்டம் Citizen Amendment Act (CAA) கடந்த மார்ச் 11 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்தே, இந்தப் போராட்டங்கள் மீண்டும் வெடிக்கத் தொடங்கி உள்ளன. எனினும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். எனினும், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ சட்டத்தை, எந்த மாநிலங்களும் அதைச் செயல்படுத்த முடியாது எனக் கூற முடியாது என்பது பல வழக்கறிஞர்களின் வாதமாக இருக்கிறது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான கபில் சிபலே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ’இச்சட்டத்தை எதிர்க்கலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாம், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அதைச் செயல்படுத்த மாட்டேன் எனச் சொல்வது அரசியல்சாசன ரீதியாக சிக்கலானது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இதற்கு ஒருசில மாநில முதல்வர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அசாமும், மேற்கு வங்கமும் இதற்காகப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த எதிர்ப்பு இயக்கத்தில் அசாமின் 30 பழங்குடி அமைப்புகளும் இணைந்துள்ளன.

சிஏஏ, மேற்கு வங்கம், அசாம்
ஆதரவும்,எதிர்ப்பும்| 2019ல் மாநிலங்களவையில் நடந்ததுஎன்ன? குடியுரிமை சட்டத்திருத்தம் கடந்துவந்த பாதை!

சிஏஏ சட்டத்திற்கு இரண்டு மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?

இந்த இரண்டு மாநிலங்களும் அந்த சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றன. வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அங்கு அதிகமிருப்பதும் அம்மாநிலங்கள் இரண்டும் அந்த நாட்டுக்கு அருகில் இருப்பதுமே அதற்கு முக்கியக் காரணம். இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதேநேரத்தில், இங்கு வாழும் முஸ்லிம் மக்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு National Register of Citizens (NRC) என்பது என்ன?

ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு National Register of Citizens (NRC) என்பது அசாம் மாநிலத்துடன் மட்டுமே தொடர்புடையது. அசாமின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்படி இது கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானதல்ல. அது சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் சம்பந்தப்பட்டது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான அளவில் குடியேறியதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 1951ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட பிறகு இந்திய குடிமக்களைக் கண்டறியவும், அப்போது பாகிஸ்தானின் பகுதியாக இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கணக்கெடுக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பணியில், 1951ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றவர்கள் அல்லது 1971ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து, வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்களின் நிலை என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஒவ்வொருவரிடமும் சான்றுகள் கேட்கப்படும். அவ்வாறு சான்றுகள் இல்லையென்றால் அவர்கள் வெளிநாட்டினராகக் கருதப்பட்டு ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட வாய்ப்புண்டு. இதன் கணக்கெடுப்புகள் முடிவடைந்து, ஏறத்தாழ 19 லட்சம் மக்கள் (19,06,657) குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 7 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மற்ற மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும் எனக் குடியுரிமை சட்டம் (தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சட்டம்) உறுதியளிப்பதால், இந்த 7 லட்சம் முஸ்லிம்களும் தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்படுவர். மேலும், என்ஆர்சி மூலமாக 1948 ஜூலை 19க்குப் பிறகு இந்தியாவில் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டைவிட்டு, வெளியேற்றும் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால்தான் அங்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

சிஏஏ, மேற்கு வங்கம், அசாம்
பினராயி விஜயன் To அகிலேஷ் யாதவ்.. CAA அமலை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்!

உண்மையில், அசாமில் குடியேறியிருப்பவர்கள் யார்யார்?

ஆனால், உண்மையில் அசாமில் அண்டை நாடுகளில் இருந்து மட்டும் வந்து மக்கள் குடியேறவில்லை. அண்டை மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் அந்த மண்ணைச் சாராத பழங்குடி இனக்குழுவினரும் தஞ்சமடைந்துள்ளனர். அதாவது ஆங்கிலேயர் காலத்தில் அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்ய அண்டை மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதாகவும், அவர்கள் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாகவே அசாமில் மக்கள் தொகை அதிகமாகி இருக்கிறது.

ஒருகட்டத்தில், வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது, இப்படி வந்த அகதிகளை இந்திய அரசு அந்நியர்களாகக் கருதாமல் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையையும் எடுக்கவைத்தது. இதன் பின்னணியில், அதாவது இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்புவரை அவர்களும் இந்தியர்களாக இருந்ததுதான் இன்னொரு ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து வந்த குடியேறிகளால் அசாம் பூர்வகுடிகள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதாலேயே, அம்மாநில குடியுரிமையில் பிரச்சினை எழுந்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன என்பது ஆய்வாளர்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது. இந்த குடியேறிகள், மீண்டும் தங்களை அசாம் குடிமக்கள் என்று நிரூபிக்க சில வாய்ப்புகளை வழங்குவதாக அரசு சொல்லியிருக்கிறது. அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அம்மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

இதையும் படிக்க: பெரும்பான்மையை நிரூபித்த அரசு; ஆனாலும் சிக்கலில் புதிய முதல்வர்.. கலக்கத்தில் ஹரியானா பாஜக!

மேற்கு வங்கத்தில் குடியேறிகள் நுழைவது எப்படி?

ஆனால், அசாமைவிட, மேற்கு வங்கத்தில்தான் வங்கதேசத்தில் இருந்துவந்த குடியேறிகள் அதிகம் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான வங்கதேச மக்கள் உள்ளே நுழைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசிகள்!

இதுகுறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் புத்ததேப் கோஷ், ”1991இல் வங்காளதேசத்தின் மக்கள்தொகை 118 மில்லியனாக இருந்திருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மதிப்பாய்வு கூறுகிறது. ஆனால் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 108 மில்லியன் குடிமக்கள் மட்டுமே உள்ளனர். வங்காளதேசத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி 2.4 சதவீதத்திற்கு மேல் இருந்தது. 1995 வாக்காளர் பட்டியலில் 4 ஆண்டுகளில் 6 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இந்த காணாமல்போன வாக்காளர்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் அதிகரித்த வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும், வாக்களிக்கப்படாத 20 லட்சம் வாக்காளர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல்: முதல் 5 போட்டிகள்.. மும்பை அணியிலிருந்து விலகும் 3 முக்கிய வீரர்கள்.. இதுதான் காரணமா?

அதுபோல், வங்கதேசம் உட்பட 12 நாடுகளில் பணிபுரியும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனமான கன்சர்ன் யுனிவர்சல், ஒவ்வொரு நாளும் 50 வங்கதேசிகள் இந்தியாவுக்குள் நுழைவதாக கடந்த சில் ஆண்டுகளுக்கு முன்பே மதிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உயர்ந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை!

அதுபோல் இன்னொரு ஆய்வறிக்கை ஒன்று, 1951ஆம் ஆண்டில், மேற்கு வங்க இந்து மற்றும் முஸ்லிம் மக்கள்தொகையில் இந்து 79.40 சதவீதமாகவும், 18.63 சதவிகிதம் முஸ்லிமைக் கொண்டிருந்ததாகவும், பின்னர் இது 1981இல் 77.10 சதவிகிதம் இந்துக்களையும் 21.55 சதவிகித முஸ்லிம்களையும், அதற்குப் பின்னர் 2001இல் 72.90 சதவிகித இந்துக்களையும், 25.37 சதவிகித முஸ்லிம்களையும் எட்டியிருந்ததாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், நாடியா, பிர்பூம், முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு தினாஜ்பூர் உள்ளிட்ட இடங்களில்தான் முஸ்லிம்கள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், 1951இல், வங்காளதேசத்தில் 22 சதவீத இந்துக்கள் இருந்ததாகவும், ஆனால், தற்போது அங்கே வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ஐபிஎல்: முதல் 5 போட்டிகள்.. மும்பை அணியிலிருந்து விலகும் 3 முக்கிய வீரர்கள்.. இதுதான் காரணமா?

மேற்கு வங்க அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய வங்கதேச குடியேறிகள்!

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையும், மேற்கு வங்கத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இருப்பதாகவும், அவர்களில் 98 சதவீதம் பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறது. அவர்கள்தான் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்களில் அரசியலில் மாற்றத்தைத் தந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, அங்குள்ள மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை முடிவெடுப்பதில் புலம்பெயர்ந்தோர் உண்மையான சக்திகளாக இருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

குடியேறிகள்  வங்கத்துக்குள் நுழைய முயன்றதை ஒப்புக்கொண்ட ஜோதிபாசு!

வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் குடியேறிகள் நுழைய முயன்றதை அம்மாநில மறைந்த முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவே, 1992ஆம் ஆண்டில் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அந்தக் கட்டுரையில் அவர், "1979இல் இருந்து, முஸ்லிம்கள்கூட, வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். 1977 மற்றும் ஏப்ரல் 1992க்கு இடையில், 2,35,529 வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்கள் எல்லை பாதுகாப்புப் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் 68,472 பேர் இந்துக்கள், 1,64,132 பேர் முஸ்லிம்கள்’ என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பெரும்பான்மையை நிரூபித்த அரசு; ஆனாலும் சிக்கலில் புதிய முதல்வர்.. கலக்கத்தில் ஹரியானா பாஜக!

வங்கத்தில் ஊடுருவும் குடியேறிகள் - உறுதிப்படுத்தும் அமித் ஷா!

தற்போதுகூட, இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், ”மேற்கு வங்கம் எல்லையில் உள்ள ஒரு மாநிலம். மேற்கு வங்கத்தில் ஊடுருவல் பிரச்னை மிகப்பெரியதாக இருக்கிறது என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆதாரங்களின் அடிப்படையில் நான் சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் நடக்கும் ஊடுருவல் அரசாங்கத்தின் ஆதரவோடு நடக்கக்கூடியது. வாக்கு வங்கிக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளால் நாட்டின் பாதுகாப்பு நெருக்கடிக்கு உள்ளாகிறது" என்று தெரிவித்துள்ளார்.

amit shah
amit shahFile pic

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பது ஏன்?

ஆனாலும் 2019ஆம் ஆண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோதே, அசாமும் மேற்கு வங்கமும் கடுமையாக எதிர்ப்பு தெரித்தன; தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ’சிஏஏ என்பது வங்கத்தை மீண்டும் பிரிப்பதற்கும், வங்காளிகளை நாட்டைவிட்டு விரட்டுவதற்குமான முயற்சி’ என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். மேலும் அவர், ’இந்தச் சட்டத்தின் மூலம் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டால், தாம் அதைக் கடுமையாக எதிர்ப்பேன்’ எனவும், ’இதை எந்த வகையிலும் என் அரசு அனுமதிக்காது’ எனவும் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தவிர, இடதுசாரி கட்சிகளும் இதைத் தேர்தலுக்கான கண்துடைப்பு என்று கூறியிருக்கின்றன.

இதையும் படிக்க: ’உன் பேரைச் சொல்லும்போதே.. முன்பே வா என் அன்பே வா..’ - மெலோடி குயின் ’ஸ்ரேயா கோஷல்’ பிறந்தநாள்!

சிஏஏவை வரவேற்கும் மேற்கு வங்க மட்டுவா சமூகத்தினர்!

ஆயினும், இந்தச் சட்டத்தை வரவேற்று மேற்கு வங்கத்தில் உள்ள மட்டுவா சமூகத்தினர் கொண்டாடி மகிழ்கின்றனர். குடியுரிமை மற்றும் பிற அடிப்படை உரிமைகள் தொடர்பாக இந்தச் சமூகத்தில் நிலவும் அச்சம் சிஏஏ அமலாக்கத்துடன் முடிவுக்கு வரும் என்பதே அவர்களின் இந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணமாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு 24-பர்கானாஸ் மாவட்டங்களைத் தவிர, நாடியா மாவட்டத்திலும் அதிகளவில் வாழும் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீண்டநாட்களாக இந்தச் சட்டத்திற்காக கோரிக்கை விடுத்துவந்தனர்.

சிஏஏ மூலம் மட்டுவா சமூகத்தினரின் வாக்குவங்கியைப் பெறும் பாஜக!

இச்சமூகத்தினர் மட்டும் அம்மாவட்டங்களில் சுமார் மூன்று கோடிப் பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தவிர, இந்தச் சமூகத்தினரின் அரசியல் பங்களிப்பும் அதாவது, மாநில சட்டசபையில் குறைந்தபட்சம் 50 இடங்களைப் பெறும் அளவுக்கு (நாம் ஏற்கெனவே கூறியதைப்போல) ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கிறது. அது, வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆம், சி.ஏ.ஏவை எதிர்க்கும் மம்தாவுக்கு எதிராக, இச்சமூகத்தினர் பாஜக ஆதரவாளர்களாக மாறக்கூடும் என்பதே அரசியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், அதை ஆயுதமாக வைத்து, பாஜகவும் அவர்களுடைய வாக்கு வங்கியைப் பெற்றுவிடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிக்க: 2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்.. திசை மாறிச் சென்ற விமானம்.. பதறிய அதிகாரிகள்!

அசாமில் பெங்காலி இந்துக்களைக் குறிவைக்கும் பாஜக!

அதுபோல் அசாமில், கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3 கோடியே 12 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்து வங்காளிகள். இதில் அசாமிய இந்துக்களுக்கு அடுத்தபடியாக பெங்காலி இந்துக்கள் உள்ளனர். இந்த பெங்காலி இந்துக்கள் வாக்குகளைத்தான் பாஜக குறிவைக்கிறது. எப்படி மேற்கு வங்கத்தில் மட்டுவா சமூகத்தினரின் வாக்குவங்கியைக் குறிவைத்ததுபோல், இங்கு இவர்களுடைய வாக்கை அறுவடை செய்ய பாஜக முயல்கிறது. அதற்காகத்தான் இந்த சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படிருப்பதாக் கூறப்படுகிறது. இந்த சிஏஏ மூலம் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்துப் பேசப்படும் என்கின்றனர் அரசியலாளர்கள்.

BJP
BJPpt desk

ஆனால், உண்மையில் இந்த சிஏஏவில் அரசியல் விளையாடுகிறதோ இல்லையோ வதந்திகள் நிறைய விளையாடப்படுகின்றன. அதனாலேயே பொதுமக்களுக்குப் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆக, இதுகுறித்து அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படாதவரை, அவர்களுடைய போராட்டங்களுக்கு விடிவு கிடைக்காது.

வங்கப்பிரிவினை, வங்கதேச உருவாக்கம் - வரலாற்று பாடம் மறந்துவிட்டதா?

இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் புரிந்து கொள்வதற்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகளின் வரலாறு முக்கியமான தெரிந்திருக்க வேண்டும். ஒன்று, வங்கதேசம் இரண்டாக பிரிந்து மேற்குவங்கம் ஆகவும் கிழக்கு பாகிஸ்தான் ஆகவும் பிரிந்தது. இது சுதந்திரத்தின் போது நிகழ்ந்தது. சுதந்திரத்திற்கு முன்பே 1905 ஆம் ஆண்டு ஒருமுறை வங்கப்பிரிவினை நிகழ்ந்து மீண்டும் 1911-ல் வங்காள மாகாணம் ஒருங்கிணைக்கப்பட்டது. பின்னர், ஆனால், பிரிவினை உணர்வு புகுந்துவிட்டதாக பாகிஸ்தானில் இருந்து தூரமாக இருந்தபோதும் அது கிழக்கு பாகிஸ்தான் ஆக பிரிந்தது. அப்பொழுது அதற்கு மதத்தை காரணமாக கூறினார்கள். ஆனால், மதம் அல்ல பிரச்னை என்பதை பின்னால் வந்த பங்களாதேஷ் பிரிவினை உணர்த்தியது.

ஒரே மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்த போதும் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் ஆக தனி நாடாக இந்தியாவின் உதவியுடன் பிரிந்தது. இங்கும் சிலர் மொழியை காரணமாக சொல்வார்கள். வங்கதேசத்தில் இரண்டு உருது மற்றும் வங்கமொழி இரண்டும் அதிகம் பேசப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மிகவும் வாழ்க்கை ரீதியாக பின் தங்கி இருந்தார்கள். தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்தார்கள். அதுதான் முக்கிய காரணமாக இருந்தது. அதாவது தெலங்கானா ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரியும் போது சொன்ன அத்தனை காரணங்களும் அதற்கும் பொருந்தும்.

மக்களுக்கு அச்சம் எழுவது எதனால்?

அதாவது, மக்களுக்கு வாழ்க்கை குறித்த அச்சம் உருவாகும் போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தீவிரம் அடைகின்றன. குடியுரிமை பிரச்னைகள் உலகம் முழுவதுமே இருக்கின்றன. சிஏஏ போன்ற குடியுரிமை சட்டங்கள் இரண்டு விதமான உணர்வுகளை எழுப்புகின்றன. இரண்டுமே தங்கள் வாழ்க்கையில் இருப்பு குறித்த அச்சத்தில் இருந்து மக்களுக்கு எழுபவை. ஒன்று, ’இவர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்து இங்கே குடியேறியதால் தங்களது வாழ்வு பறிபோய்விட்டது; இந்த சட்டம் வந்தால் நமக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்’ என்ற எண்ணம் சிலருக்கு உருவாகி இருக்கும். மற்றொன்று, நாம் பல ஆண்டுகளாக இங்கே இருக்கின்றோம், நம்மை திடீரென வெளியேற்றிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் சிலருக்கு உருவாகி இருக்கும். அல்லது நம்மை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினால் என்ன செய்வது என்ற அச்சம் உருவாகி இருக்கலாம். இவையெல்லாம் நியாயமான உணர்வுகளே. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது ஒரு அரசுடைய கடைமை.

மத, வாக்குவங்கி அரசியல் வேண்டாம் - வரலாற்று பாதையில் முடிவு எடுக்க வேண்டும்

மேலே வங்காளத்தின் வரலாறு சொன்னதற்கு முக்கிய காரணம். வங்காளம் என்பது நீண்ட நெடிய காலம் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது. வரலாற்றின் நீண்ட நெடிய பக்கம் அப்படித்தான் இருந்தது. சுதந்திர போராட்டத்தின் போதும் வங்காளத்தின் பங்களிப்பு என்பது அளப்பரியது. மதங்களை கடந்து எல்லோரும் இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார்கள். தவிர்க்க முடியாத படி சிலர் பாகிஸ்தானுக்கும், சிலர் வங்கதேசத்திற்கும் செல்ல நேரிட்டது. அதனால், சிஏஏ போன்ற சட்டங்களை வரலாற்று கண் கொண்டு பார்க்க வேண்டும். யாராக இருந்தாலும் மதத்தின் கண் கொண்டு பார்ப்பது மிகக் கொடூரமான விளைவுகளுக்கு ஈட்டுச் செல்லும். ஏனென்றால் அரசியல் தலைவர்கள் போடும் தேர்தல் கணக்குகளால் பாதிக்கப்படப்போவது மக்களின் மனங்களும் தான். தலைவர்கள் விதைக்கும் விஷ கருத்துக்கள் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றிவிடும்.

ஒரு நாட்டைவிட்டு ஏன் ஒருவன் இன்னொரு நாட்டிற்கு செல்கிறான், குறிப்பாக அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் ஏன் இஸ்லாமிய நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்கிறான். அடிப்படை பிரச்னை எங்கிருந்து எழுகிறது. ஏனெனில் பிரச்னை வாழ்க்கை குறித்தது. இதில் மதத்தை ஒருபோதும் கலக்கவே கூடாது. அஸ்ஸாம் மக்களுக்கு இருக்கும் உணர்வும் நியாயமானதே. அதனால், வரலாற்று புரிதலோடு அரசுகள் முடிவினை எடுக்க வேண்டும் என்பதை இங்கு சொல்ல வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது. இது நீண்ட நெடிய காலத்திற்கான பிரச்னை. அதனால், பொறுமையாகவும், நிதானமாகவும் அரசுகள் இதனை கையாள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com