விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, ஹரியானாவில் பாஜக அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'கிங் மேக்கர்' ஆக கருதப்படும் ஜனநாயக் ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான சூழல் எழுந்துள்ளதால் அங்கு அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டு 2019 அக்டோபர் மாதத்தில், ஹரியானாவின் அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. காரணம், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. 90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் 40 இடங்களை வென்றது பாஜக. காங்கிரஸ் 31 இடங்களை வென்றது. ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) 10 இடங்களை வென்றது. இது தவிர, ஹரியானா லோகித் கட்சி 1, ஐ.என்.எல்.டி 1 மற்றும் 7 இடங்களில் சுயேட்சைகள் வென்றனர். ஆட்சியமைக்க 45 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக பெரும்பான்மை இன்றி தவித்தது.
இத்தகைய சூழ்நிலையில், 'கிங் மேக்கர்' ஆக உருவான ஜனநாயக் ஜனதா கட்சி, பாஜகவுக்கு ஆதரவளித்து மீண்டும் மனோகர் லால் கட்டாரை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது. இதற்கு பலனாக ஜே.ஜே.பி-யின் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது பாஜக. இவர்களின் கூட்டணி ஆட்சி ஒரு வருடத்திற்கும் மேலாக நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், இதில் விவசாயிகள் போராட்டம் காரணமாக இப்போது விரிசல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
விவசாயிகள் போராட்டத்தால் புதிய ட்விஸ்ட்!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களில் முக்கியமானவர்கள் ஹரியானா விவசாயிகள். பெரும் எண்ணிக்கையிலான ஹரியானா விவசாயிகள், மத்திய அரசை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் போராட்டம் பாஜக - ஜே.ஜே.பி கூட்டணியை அசைத்துப் பார்த்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா தனது கட்சி நிர்வாகிகளுடன் சில நாட்களுக்கு முன்பு, ஒரு சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பில், அவரின் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தங்கள் பகுதியில் விவசாயிகள் இயக்கத்தின் தாக்கம், மாநிலங்களுக்கு மக்கள் அணுகுமுறை போன்றவை குறித்து கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல் துஷ்யந்த் சவுதாலாவும் விவசாயிகளுக்கே ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய விவசாய சட்டத்தில் `விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என்றும் போர்க்கொடி தூக்கியுள்ள சவுதாலா, அதைச் செய்ய மறுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என பாஜகவை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள சவுதாலா, ``விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தார்.
மத்திய அரசு அளித்த எழுத்துபூர்வ திட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையும் சேர்க்கப்பட்டுள்ளது. நான் துணை முதல்வராக இருக்கும் வரை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற நான் பணியாற்றுவேன். என்னால் அதைப் பெற முடியவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வேன்" என்று நேரடியாகவே எச்சரித்துள்ளார். விவசாயிகள் தரப்பில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் இருந்து எழுந்த அழுத்தம் காரணமாகவே சவுதாலா தற்போது ராஜினாமா முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கத் தொடங்கியுள்ளது. 2019 தேர்தலின்போதே, ஜே.ஜே.பி மற்றும் பிறருடன் கூட்டணி அரசை அமைக்க முயன்றது காங்கிரஸ். ஆனால், துஷ்யந்த் பாஜகவை ஆதரித்து கட்டாரின் அரசை அமைத்தார். தற்போது மாறிவரும் சூழ்நிலையை தங்களுக்குப் பயனுள்ளதாக மாற்ற ஹரியானா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா முயன்று வருகிறார். அவர் சவுதாலா உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அப்படி சவுதாலா காங்கிரஸை ஆதரிக்க முடிவு செய்தால், பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கும் நிலை ஏற்படலாம். ஆட்சிக்கு 45 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் சுயேட்சைகளின் ஆதரவு அதிகமாக தேவைப்படும். இதனால் ஹரியானா மாநில அரசியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.