'ஸ்கெட்ச்' போட்ட சிபிஎம்... தடம் பதித்த ஒற்றைத் தாமரையையும் கிள்ளியெறிந்த கேரள மக்கள்!

'ஸ்கெட்ச்' போட்ட சிபிஎம்... தடம் பதித்த ஒற்றைத் தாமரையையும் கிள்ளியெறிந்த கேரள மக்கள்!

'ஸ்கெட்ச்' போட்ட சிபிஎம்... தடம் பதித்த ஒற்றைத் தாமரையையும் கிள்ளியெறிந்த கேரள மக்கள்!
Published on

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் நிலைதான் இப்போதை ஹாட் டாபிக். தமிழ்நாட்டில் பாஜக 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் கணக்கை துவங்கினாலும், கேரளாவில் இருந்த ஓர் இடத்தையும் இழந்துவிட்டது. 2016-ல் நேமம் தொகுதியில் வென்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் அதை கூட இழந்திருக்கிறது. மேலும், கடந்த முறை ஏழு தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அது, இந்த முறை ஐந்தாக மாறிப்போனது.

நேமம் வெற்றி, கேரள அரசியலில் பாஜகவுக்கு ஒரு படிக்கல்லாக இருந்தது. அதனால், கேரள குஜராத் என்றும் நேமம் அழைக்கப்பட்டு வந்தது. அதனை முன்னிறுத்தியே கேரள பாஜக இந்த முறை அரசியலை தொடங்கியது. இதேபோல் இந்து வாக்குகளை குறிவைத்து சபரிமலை கோயில் நுழைவு பிரச்னை தொடர்பான சர்ச்சையை எழுப்புவதன் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும் என்று பாஜக நம்பியிருந்தது. ஆனால், சுமார் 11% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 2016-ல் இதே சதவீத வாக்குகளை தான் பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் பெரும் தோல்வியுற்றவர்களில் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் முக்கியமானவர். அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளான கொன்னி அல்லது மஞ்சேஸ்வரில் இருந்து வெல்ல முடியவில்லை. ஆனால் அதேநேரம், மிகவும் பிரபலமான மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராக பேசப்பட்ட நிலையில், பாலக்காடு தொகுதியில் கடைசி சுற்று எண்ணும் வரை எதிர் வேட்பாளருக்கு கடும் போட்டியாக இருந்தார். ஆனால், இறுதியில் அவரும் தோல்வியடைந்தார்.

பெரும்பாலும் இந்தத் தேர்தலில் இந்துத்துவ கொள்கைகளை முன்னிறுத்தியே பாஜக போட்டியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரத்தில் சபரிமலை பிரச்னையை எழுப்பினார். தமிழகத்தில் முருகன் கோஷங்களை எழுப்பியது போல, அங்கு ஐயப்பா கோஷங்களை எழுப்பினர். இந்துக்கள் (தோராயமாக 35 சதவீதத்துக்கும் அதிகம்) கேரளாவின் மிகப்பெரிய சமூகமாக உள்ளனர். கிராமம் அல்லது நகரங்களாக இருந்தாலும், மாநிலத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், பரவலாகவும் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்து மக்களை குறிவைத்து பாஜக இப்படி களப்பணியாற்றியது. ஆர்.எஸ்.எஸ் நேரடியாக பல தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அதனை தவிடுபொடியாக்கியது ஆளும் எல்.டி.எப் கூட்டணி. எப்படி என்கிறீர்களா..? அதுதான் மார்க்சிஸ்ட்டின் 'ஸ்கெட்ச்'.

கழகூட்டம் தொகுதியில், பாஜக வேட்பாளர் சோபா சுரேந்திரன் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் தோல்வியடைந்தார். இதே நிலை பெரும்பாலான பாஜக வேட்பாளர்களுக்கு நேர்ந்தது. அதாவது, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் சிபிஎம் நேரடியாக வேட்பாளர்களை களமிறங்கியது. அதுவும் வலுவான வேட்பாளர்களை. உதாரணமாக, நேமம் தொகுதியை எடுத்துக்கொள்வோம்.

பாஜகவை கேரளாவில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு ஆளும் மார்க்சிஸ்ட் வேலை பார்த்தது. முன்னதாக பிரசாரத்தின் போது, முதல்வர் பினராயி விஜயன், ``ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நேமமில் பாஜக துவங்கிய கணக்கை இந்த முறை, நாங்கள் அந்தக் கணக்கை மூட வைப்போம். பாஜகவின் வாக்குப் பங்கும் குறையும்" என்று கூறியிருந்தார். நேமமில் பாஜக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த ராஜகோபாலை மாற்றி முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரனை களமிறங்கியது பாஜக.

ஆனால்ம் மார்க்சிஸ்டோ கடந்த முறை போட்டியிட்ட வி சிவன்குட்டியை களமிறங்கியது. இவர் ஏற்கெனவே இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். தொகுதியில் இந்துவா, மத்திய அரசின் பாராமுகம் என பாஜகவுக்கு எதிரான வலுவான பிரசாரத்தை செய்தது சிபிஎம். கூடவே தங்களின் திட்டங்களையும் எடுத்து வைத்தது. அது சிபிஎம் கட்சிக்கு கைகொடுக்க நேமம் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் சிபிஎம் கடும் குடைச்சலை பாஜகவுக்கு கொடுத்தது. போதைக்குறைக்கு காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய கொஞ்ச நஞ்ச வாக்கையும் பிரித்து பதம் பார்த்தன. குறிப்பாக பாலக்காடு தொகுதியில் மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரனை காங்கிரஸ் வேட்பாளர் ஷபி பரம்பில் 3,859 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதேபோல் கேரள மக்கள் மத்தியில் பாஜகவின் செயல்பாடுகள் வரவேற்பை பெறவில்லை. அதிலும் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் அவர்களை மேலும் உஷ்ணமாக்கியது. வடமாநிலங்களில் சொல்வது போல, லவ் ஜிஹாத், மாட்டிறைச்சி விவகாரங்களை முன்னிறுத்தி பேசியது. குறிப்பாக இந்துத்துவ கொள்கையை தூக்கிப்பிடித்தது கேரளத்தில் இந்துக்களுக்கு சரிக்கு சமமாக இருக்கும் மற்ற மதங்களை சேர்ந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு உதாரணம், கோழிக்கோடு போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியில் பாஜக மூன்றாமிடமே பிடிக்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com