உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் வருகிற தேர்தலில் பாஜக தேர்தலை சந்திக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு அம்மாநில பாஜக தலைவர் விளக்கம் கொடுத்து, 'யோகியே முதல்வர் வேட்பாளர்' என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அரவிந்த் குமார் சர்மா, சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தவர் இந்த அரவிந்த் குமார் சர்மா. சில வாரங்களாக இவர், மோடியின் வாரணாசி தொகுதியில் நேரடியாக முகாமிட்டு கொரோனா நிவாரண பணிகளை பார்வையிடுவது, பின்னர் அதுபற்றி மோடி - அமித் ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது என உத்தரப் பிரதேசத்தில் சுற்றிச் சுழன்று வருகிறார். கடைசியாக மத்திய அரசு பணியில் இருந்த இவர், கடந்த ஜனவரியில்தான் பதவியிலிருந்து விலகினார். அதற்கடுத்த 3 நாட்களில் உத்தரப் பிரதேச பாஜக உறுப்பினராக சேர்ந்துகொண்டார். சில நாட்களில் அவர் சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆனார்.
அவருக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவையில் அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என மோடி தரப்பு விருப்பப்படுவதாகவும், ஆனால் உத்தரப் பிரதேச முதல்வராக இருக்கும் யோகியின் தரப்பு அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும், இதனால் மோடி யோகியின்மீது அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
மோடி, அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக பாஜகவின் எதிர்காலம் என பேசப்பட்டு வரும் யோகியின் இடத்துக்கு திடீரென அரவிந்த் குமார் சர்மா கொண்டுவரப்படுவதால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக தேர்தலை சந்திக்காது என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது பேசியுள்ள அம்மாநில பாஜக தலைவர் சுவாதந்திர தேவ் சிங், ''முதல்வர் யோகி ஆதித்யநாத் தவிர வேறு யாருடைய தலைமையிலும் அடுத்த ஆண்டு உ.பி.யில் பாஜக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளாது. யோகியின் தலைமையிலேயே தேர்தலை பாஜக சந்திக்கும். தற்போது கட்சித் தொண்டர்கள் கிராமங்களுக்குச் சென்று மோடி மற்றும் யோகி அரசாங்கங்களின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்துவார்கள். கட்சி தன் தொண்டர்களின் கடின உழைப்பை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலமாகவும், கடின உழைக்கக்கூடிய ஒரு நபராகவும் யோகிதான் இருக்கின்றார்" என்று பேசியுள்ளார்.
இவரின் பேச்சு மற்ற யூகங்களை பொய்யாக்கும் விதமாக அமைந்துள்ளது. முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், ''பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்திய சமீபத்திய உயர்மட்டக் கூட்டங்கள் தனது அரசாங்கத்தில் நடக்கப்போவதாக கூறப்படும் மாற்றங்களுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை" என்றார்.
இதற்கிடையே, அரசியல் சச்சரவுகள் இருந்துவரும் வேளையில் தேர்தல் பணிகளை மாநில பாஜக தலைமை துவங்கிவிட்டது. ஏற்கெனவே மாவட்ட அளவிலான செயற்பாட்டாளர்களுடன் கூட்டங்களை நடத்தி வருகிறது உத்தரப் பிரதேச மாநில பாஜக. அப்படி, கோராக்பூரில் நடந்த கூட்டத்தில், கலந்துகொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) சுனில் பன்சால், 'இந்த நேரத்தில் மாநில அலகுக்கு மிக முக்கியமான முகம் உ.பி. முதல்வர் யோகி தான்' என்று தொண்டர்கள் மத்தியில் பேசி இருக்கிறார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் விஷயத்தில் யோகி தலைமையிலான மாநில அரசு தோற்றுவிட்டது என எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் புகார் கூறி வருகின்றனர். இந்த விஷயத்தை தேர்தல் பிரசாரமாகவும் பயன்படுத்த மற்ற கட்சிகள் தீர்மானித்திருக்கும் நிலையில், இதனை முறியடிக்கவும் உத்தப்பிரதேச பாஜக தயாராகி வருகிறது. இந்த எதிர்ப்பை சமாளிக்க விரைவில் 403 சட்டமன்ற இடங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கும் வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.