“நான் வேட்பாளர் என்பது செய்திச் சேனல்களில் அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கே தெரிந்தது. வேட்பாளராக வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் என் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தது. ஆனால் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை” என உற்சாகமாக தெரிவிக்கிறார் வயநாடு மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ். மூத்த தலைவர்களை எதிர்த்து களமிறங்கும் நவ்யா ஹரிதாஸ் யார்? அவர் வெற்றி பெறுவார் என பாஜக ஏன் நம்புகிறது?
வயநாடு மக்களவைத் தொகுதி என்பது காங்கிரஸ் கோட்டையாக கருதப்படுகிறது. ஏனெனில் தனி மக்களவைத் தொகுதியாக மாறிய 2009-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர். 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஷா நவாஸும், 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் சிபிஐ சார்பில் சத்யன் மோகேரியும் களம் காண்கின்றனர். பிரியங்கா காந்தியும், சத்யன் மோகேரியும் மூத்த தலைவர்கள். மூத்த தலைவர்களுடனான மோதலில் கவனிக்கப்படும் நபராக கவனம் ஈர்க்கிறார் பாஜக வேட்பாளரான நவ்யா ஹரிதாஸ்.
தற்போது 39 வயதாகும் நவ்யா ஹரிதாஸ் பொறியியல் பட்டதாரி. அவரது குடும்பம் சங்பரிவார் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த குடும்பம் என்பதால், தனது வீட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய கூட்டங்களிலும், மாணவர் செயல்பாடுகளிலும் பங்கேற்றவர் என செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார். பிடெக் படித்தபின், ஹைதராபாத்தில் உள்ள HSBC வங்கியில் மென்பொருள் நிபுணராக பணியாற்றியவர். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்திற்குப் பின், கணவருடன் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியவர்.
2015-ஆம் ஆண்டில் விடுமுறைக்காக குழந்தைகளுடன் கோழிக்கோடு வந்திருந்தார். அப்போது, தேர்தல் நேரம் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாஜக அவரைக் கேட்டது. துணிந்து இறங்குவோம், தோற்றுவிட்டாலும் பாதகமில்லை. சிங்கப்பூருக்கு திரும்பிவிடலாம் என்பதே நவ்யா ஹரிதாஸின் திட்டமாக இருந்துள்ளது. ஆனாலும், அந்தத் தேர்தலில், கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக 129 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அப்போதிருந்து, அவர் ஒரு முக்கிய நபராகிவிட்டார், ஊழலற்ற நிர்வாகத்திற்கான அவரது நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர்.
பின் 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். அப்போது 479 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கட்சித் தலைவர்களையே ஆச்சரியப்படுத்தினார். அடிமட்ட வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பும், தொகுதி மக்களுடன் ஈடுபடும் திறனும் அவரை கட்சியில் மரியாதைக்குரிய குரலாக மாற்றியுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், கோழிக்கோடு தெற்கு தொகுதியில் நவ்யாவைக் களமிறக்கியது பாஜக. அந்த தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சியின் வேட்பாளர் அஹமத் தேவர்கோவில் வெற்றி பெற்ற நிலையில், நவ்யாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. ஆனாலும், அந்தத் தொகுதியில், 16.7% ஆக இருந்த வாக்கு சதவீதத்தை 21% ஆக உயர்த்தி இருந்தார். பாஜகவின் மகிளா மோர்ச்சாவின் மாநிலப் பொதுச் செயலாளராக பணியாற்றும் நவ்யா, தனது சாதனைப் பதிவுகளால் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில்தான் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் நவ்யா ஹரிதாஸ். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், “அரசியலில் தங்களது குடும்பத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கவே காந்தி குடும்பம் வயநாடு மக்களவைத் தொகுதியை பயன்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டுகிறார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என்பதையும் மிக நம்பகமாக தெரிவிக்கிறார். மேலும், ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் எப்போதாவது வயநாடு வருபவர்கள். நான் இங்கேயே வசிப்பவள் என்றும் கூறுகிறார்.
சுகாதாரம் மற்றும் விவசாயத்துறைகளில் வயநாடு மக்களவைத் தொகுதி எதிர்கொள்ளும் சிக்கலைத்தான் தனது பரப்புரையில் அதிகம் பயன்படுத்துகிறார். கேரளாவில் பாஜக வெல்லும் இரண்டாவது மக்களவைத் தொகுதியாக வயநாடு இருக்கும் என்கிறார் நம்பிக்கையாக.