’சொல்லவே முடியாத வார்த்தைகள்’- நாடாளுமன்றத்தில் பாஜக எம்பியின் தரக்குறைவான இஸ்லாமிய வெறுப்பு பேச்சு!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரில் எம்.பி. குன்வர் டேனிஷ் அலியை, தரக்குறைவாகப் பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரியிடம் விளக்கம் கேட்டு கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி
குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரிtwitter
Published on

புதிய நாடாளுமன்றத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ள இந்த இனிய தருணத்தில் இந்திய ஜனநாயகத்தின் மாண்பையே கேள்விக்குள்ளாகும் வகையில் பாஜக எம்பி தன்னுடைய பேச்சை நிகழ்த்தியிருக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாக பிரச்னைகளை முன் வைக்க வேண்டிய பொறுப்புமிக்க பதவிகள் இருக்கக் கூடியவர்கள் இப்படி வெளிப்படையாக சொல்லவே நா கூசுகின்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் உதிர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த பாஜக எம்பி, நாடாளுமன்றத்தில் அவர் பேசியது என்ன? அவருக்கு வந்த எதிர்வினைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரின் 2வது நாளான செப். 19ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அதன்மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் செப். 20ஆம் தேதி விவாதத்துக்கு மத்தியில் மகளிர் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதைத் தொடர்ந்து சந்திரயான் திட்டம் வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியை தரக்குறைவாக பாஜக எம்.பி.

இந்த விவாதத்தின்போது பங்கேற்றுப் பேசிய பா.ஜ.கவின் தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, சந்திரயான் வெற்றி தொடர்பாக மோடியைப் புகழ்ந்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலியைப் பார்த்து, ‘ஏய் பயங்கரவாதி உட்காரு’ என்றார். டேனிஷ் அலியின் மதத்தை குறிப்பிட்டும், கேட்கவே முடியாத அளவிற்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேசமாக பேசினார் ரமேஷ் பிதூரி. மக்களவையில் இந்த பேச்சை பாஜகவின் மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. தொடர்ந்து இதே வார்த்தையை அவர் பயன்படுத்தி பேசியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.

அவரது பேச்சுக்கு, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு அப்போதே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். ‘உறுப்பினர் கூறிய கருத்துகளால் எதிர்க்கட்சிகள் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என அவர் கூறினார்.

அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் குறித்து லோக்சபா சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என ஓம் பிர்லாவுக்கு குன்வர் டேனிஷ் அலி, கடிதம் எழுதினார்.

பாஜக எம்.பிக்கு விளக்கம் கேட்டு கட்சி நோட்டீஸ்!

அதில், ‘இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மேலும் சபாநாயகராக உங்கள் தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இது நடந்தது என்பது இந்த பெரிய தேசத்தின் சிறுபான்மை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் எனக்கு உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது. நமது நாட்டின் ஒற்றுமையை மேலும் சீர்குலைக்காமல் இருக்க, அனுபவம் வாய்ந்த உறுப்பினரை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரேவழி இதுதான். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுமாறு உங்கள் அன்பானவர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லோக்சபாவில் பேசிய பேச்சு தொடர்பாக விளக்கம் கேட்டு, ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ.க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவின் அறிவுரைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்... ஏன், எதற்காக?

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை இடைநீக்கம் செய்து சபநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பின்னர், பாஜக உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகி தான் தெரிவித்த கருத்துகளுக்காக சவுத்ரி வருத்தம் தெரிவித்ததை அடுத்து, சவுத்ரி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

இதே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், ’மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என வலியுறுத்தியபோதும் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மசோதா ஒன்றில் போலி கையெழுத்து விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்

அதேபோல் மற்றொரு ஆம் ஆத்மி எம்.பியான சுஷில் குமார் ரிங்கு, இதே மழைக்கால கூட்டத்தொடரின்போது காகிதங்களை வீசி எறிந்ததற்காக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் பிதூரிக்கு எதிராகப் பதிவிடப்பட்ட பதிவுகள்

முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், "பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, நாடாளுமன்றத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். பாஜக ஏன் அவரை இடைநீக்கம் செய்யாமல் இன்னும் பாதுகாத்து வருகிறது? இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 ஜெய்ராம் ரமேஷ்,
ஜெய்ராம் ரமேஷ், pt desk

மேலும் சிலர் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘நேற்று சந்திராயன்:3 வெற்றியைப் பாராட்டும் விதமாக மக்களவையில் நடந்த விவாதத்தில் BJP எம்.பி.க்கள் பேசிய காணொலிகளை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.

அறிவியலுக்கு எதிரான பழமைவாத பித்துப்பிடித்த ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள் அவை’ எனப் பதிவிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, மஹுவா மொய்த்ரா, ’பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை 'முல்லா பயங்கரவாதி' என்றெல்லாம் அவதூறாக மக்களவையில் பேசியுள்ளனர்.

பாஜக ஆதரவு மீடியாவுடன் (Godi media) மரியாதைக்குரிய கீப்பர் ஓம் பிர்லா, விஸ்வகுரு நரேந்திரமோடி, பாஜக தலைவர் JP.நட்டா இதுகுறித்து ஏதாவது நடவ்டிக்கை எடுக்கப்படுமா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக என்.சி.பி எம்பி சுப்ரியா சுலே மற்றும் திரிணாமூல் எம்பி அபருபா போட்டார் மக்களவை பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com