ஹரியானா அமைச்சருக்கு 'கோவாக்ஸின்' பலன் தராதது ஏன்? - பாரத் பயோடெக் விளக்கம்

ஹரியானா அமைச்சருக்கு 'கோவாக்ஸின்' பலன் தராதது ஏன்? - பாரத் பயோடெக் விளக்கம்
ஹரியானா அமைச்சருக்கு 'கோவாக்ஸின்' பலன் தராதது ஏன்? - பாரத் பயோடெக் விளக்கம்
Published on

மொத்தம் இரண்டு டோஸ் கொடுக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஹரியானா அமைச்சர் முதல் டோஸ் மட்டுமே எடுத்துக்கொண்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத் துறை மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ். 67 வயதான இவர் சமீபத்தில், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் பங்கெடுத்து, பரிசோதனைக்காக தடுப்பு மருந்தை தன் உடலில் செலுத்திக்கொண்டார்.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் அனில், "மாநிலத்திலேயே தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானாவின் முதல் தன்னார்வலர் நான்தான்" என்றார். நவம்பர் 20-ம் தேதி அவருக்கு தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்ட நிலையில், இன்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார் அமைச்சர் அனில்.

அனில் எடுத்துக்கொண்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கோவாக்ஸின் தடுப்பு மருந்து விலங்குகள் மீது செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி கண்ட நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வரும் பாரத் பயோடெக், தடுப்பு மருந்தை 26,000 பேருக்கு செலுத்த திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சர் அனிலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்த நிறுவனம் தயாரிக்கும் கோவாக்ஸின் தடுப்பு அளிக்கக் கூடிய பலன் குறித்து சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து விளக்கம் அளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், "கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை என்பது மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 28 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னர்தான் கொரோனாவை கோவிக்ஸின் கட்டுபடுத்துகிறதா, அதன் செயல்திறன் எப்படிப்பட்டது என்பது தீர்மானிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com