சாதா சந்தை டு சர்வதேச சந்தை - விப்ரோவை வளர்த்த அசிம் பிரேம்ஜி கதை
விப்ரோ நிறுவனத்தை சுமார் அரை நூற்றாண்டாக வழிநடத்தி உலக அரங்கில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கிய அசிம் பிரேம்ஜி தனது செயல் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். யார் இந்த அசிம் பிரேம்ஜி?
குஜராத் மாநிலத்தில் பிறந்த அசிம் பிரேம்ஜி, 1966ஆம் ஆண்டு அவரின் தந்தை மறைவிற்குப் பிறகு தனது 21வது வயதில் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். சமையல் எண்ணெய், காய்கறி வியபாரம் என சிறிய அளவிலேயே வணிகத்தில் ஈடுபட்டிருந்த விப்ரோ நிறுவனத்தின் பாதை, அசிம் பிரேம்ஜி பொறுப்பேற்ற பிறகே, உலகறியும் பெரிய தொழில் நிறுவனமாக உருவெடுக்கத் தொடங்கியது.
அசிம் பிரேம்ஜியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தால் 1981-82ஆம் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தில் விப்ரோ நிறுவனம் கால்பதித்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் விப்ரோ நிறுவனம் மென்பொருள் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் அசுர வளர்ச்சி கண்டது. 2000ஆம் ஆண்டில் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனமான விப்ரோ பட்டியலிடப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய 3ஆவது நிறுவனமாக உருவெடுத்த விப்ரோ நிறுவனத்தின் வருவாய், 2004ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாயைத் தாண்டியது என்றால் அது அசிம் பிரேம்ஜியின் வணிகத் திறனே என வணிக உலகில் பேசப்பட்டது.
இந்நிலையில்தான், இந்திய அரசு 2005ஆம் ஆண்டில் அசிம் பிரேம்ஜிக்கு பத்ம பூஷண் விருதையும், 2011ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதையும் வழங்கி சிறப்பித்தது. இதுதவிர, வெளிநாட்டு மற்றும் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கவுரவ மருத்துவர் பட்டத்தையும் அளித்து சிறப்பித்தன. தொடர்ந்து அமெரிக்காவின் ஃபார்ச்சூன் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி இணைந்ததுடன், விப்ரோ நிறுவனமும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றது.
சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரிய நிலைக்கு உயர்ந்தாலும், சமூக நலனை மறவாத அசிம் பிரேம்ஜி, 2001ஆம் ஆண்டில் தொடங்கிய தொண்டு நிறுவனம் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அசிம் பிரேம்ஜி செயல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது மகன் ரிஷத் பிரேம்ஜி புதிய செயல் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் விப்ரோ நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜி இல்லாத நிலையில், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பலரும் எதிர்நோக்கி உள்ளனர்.