நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் ஆறு நாட்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் நிலையில், பல மசோதாக்கள் விவாதம் இன்றியே ஒப்புதல் பெற்றுள்ளன.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மக்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திவரும் எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்காத நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
1. பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கான மசோதா
2. திரைப்படங்களை அனுமதியின்றி வெளியிடும் திருட்டை தடுப்பதற்கான மசோதா
3. கிரிமினல் குற்றங்களாக கருதப்படும் பல சிறிய விதி மீறல்களை அபராதத்துடன் முடித்துக் கொள்வதற்கான "ஜன் விசுவாச" மசோதா
4. வனங்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா
5. உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா
6. சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா
7. இமாச்சல பிரதேச மாநில பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா
8. பல்வேறு பயனற்றுப் போன சட்டங்களை நீக்குவதற்கான மசோதா
9. செவிலியர் படிப்பு மற்றும் பயிற்சியை முறை செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா
1. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
2. கடல் கனிமங்கள் பயன்பாட்டை முறை செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு அதற்கான மசோதா
3. பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை பதிவு செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா
4. ஜம்மு காஷ்மீர் பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா
5. ஜம்மு காஷ்மீர் பட்டியலினத்தவர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா
இம்மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் தொடர்பான மோதல் வெடித்த ஆரம்ப கட்டத்திலிருந்து இப்படி பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அமளிக்கிடையே எந்தவித விவாதமும் இன்றி, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை பதிவு செய்யாமல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவது மற்றும் ஒப்புதல் பெறுவது போன்ற நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகியும் வருகிறது.