மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது தேர்தல் சீர்திருத்த மசோதா. குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மக்களவையில் அது நிறைவேறியதை தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றி வைத்துள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் விவரங்களை ஏன் இணைக்க வேண்டும் என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்பியுள்ளனர். ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, ’ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது?’ என்பதே பெரும்பாலான எதிர்க்கட்சிகளின கேள்வி.
ஒரே நபர் பல இடங்களில் வாக்காளராக பதிவு செய்து கொள்வதை தவிர்க்கவே இந்த புதிய முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டால், ஒரு நபர் தன் இருப்பிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு கொடி பெயர்ந்தாலும் சுலபமாக புதிய விலாசத்தில் வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக "ரிபிரேசெண்டேஷன் ஆஃ பிபிள் ஆக்ட்" (Representation of peoples act) என்று அளிக்கப்படும் தேர்தல் விதிகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்