குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு மட்டுமல்லாது, அவரது மொத்த குடும்பமும் தாக்குதலுக்கு உள்ளானது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். அப்போது பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மதவெறியர்கள் ஈவு இரக்கமின்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். எனினும், அவர்களிடமிருந்து பில்கிஸ் பானு படுகாயங்களுடன் உயிர்தப்பினார்.
பின்னர் இதுதொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின் அதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் அரசின் முடிவால் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் மனுதாரராகவும், பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாகவும் நின்றவர், முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான சுபாஷினி அலி. இவரைத் தொடர்ந்து அடுத்த ஆதரவுக்கரம் நீட்டியவர், பேராசிரியை ரூப்ரேகா. 11 குற்றவாளிகள் விடுதலையானதைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த இவர், டெல்லியில் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அடுத்து மூன்றாவதாக பத்திரிகையாளர் ரேவதி லாலும் பில்கிஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். இதைத் தொடர்ந்தே, சுபாஷினி அலி, ரேவதி லால், ரூப்ரேகா வர்மா ஆகியோரின் பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களுடன் சமீபத்தில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவும் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கபில் சிபல், விருந்தா குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங், மீரான் சாதா போர்வான்கர், ஷோபா குப்தா உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், இவ்வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விரிவான விசாரணை செய்து வந்த சூழலில், கடந்த ஆண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
விடுதலை தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள்” எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ”முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என உத்தரவிட்டது.