வார நாட்கள் முழுவதும் அலுவலகம், பள்ளி, கல்லூரி என சென்றுவிட்டு வார இறுதியில் தாமதமாக குளித்துக்கொள்ளலாம் அல்லது வேலை, படிப்புக்கு லீவ் விடுவது போல குளியலுக்கும் லீவ் கொடுத்து விடலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஏராளம்தாம்.
ஆனால், முக்கியமான குறிக்கோளை முன்வைத்து சபதமாக ஏற்று ஒரு நபர் 22 ஆண்டுகளாக குளிக்காமலேயே இருக்கிறார் என்றால் உங்களால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதுதானே?
உண்மையிலேயே பீகாரைச் சேர்ந்த 40 வயதான தர்மதேவ் என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்கமால்தான் இருக்கிறாராம். அதுவும் சமூகத்தின் நலனை எதிர்நோக்கி சபதம் செய்திருக்கிறாராம்.
அப்படி என்ன குறிக்கோள்? தர்மதேவ் எடுத்த சபதம்தான் என்ன? அது குறித்து பார்ப்போம்.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைகுந்த்புர் கிராமத்தின் மஞ்சா கருப்பு என்ற பகுதியில் வசித்து வருபவர் தர்மதேவ். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது.
சரியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு, தர்மதேவின் வாழ்வில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாகவும், அதனையடுத்து சமூகத்தில் பெண்கள் மீதான, அவர்களுக்கு எதிரான குற்றங்கள், நிலத்தகராறுகள், விலங்குகள் மீதான வன்முறைகள் எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் குளிப்பேன் என சபதம் ஏற்றிருக்கிறார்.
அன்று முதல் இதவரை தர்மதேவ் தன் மீது ஒரு துளி தண்ணீர் கூட படாமல் பார்த்து வருகிறாராம். அவரது மனைவி மற்றும் மகன் இறந்த போதுகூட தர்மதேவ் குளிக்கவில்லையாம். இதில் ஆச்சர்யமளிக்கக் கூடிய ஒன்று என்னவென்றால், இத்தனை ஆண்டுகளாக குளிக்கமாலேயே இருக்கும் தர்மதேவிற்கு இதுவரை எந்த நோயும் ஏற்படவில்லையாம்.
இது தொடர்பாக ETV பாரத் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “1975ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் ஜக்தலில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1978ல் எனக்கு திருமணமாகி சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்து வந்தேன்.
1987ம் ஆண்டு திடீரென நிலத் தகராறுகள், விலங்குகளை கொல்லுதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை உணர்ந்தேன். அது குறித்தான தேடலின்போது எனக்கான குருவை கண்டறிந்து ஆன்மிகத்தை பின்பற்றினேன். அப்போது முதல், ராமரை நினைத்து தியானத்தில் ஈடுபட்டு வருகிறேன்.” என தர்மதேவ் கூறியுள்ளார்.
ALSO READ:
இதனால் 2000ம் ஆண்டு காலத்தில் தன்னுடைய வேலையை விட்டார். ஆனால் குடும்ப சூழல் காரணமாக மீண்டும் பணியில் சேர்ந்த போதும், தர்மதேவ் குறித்து அறிந்த தொழிற்சாலை நிறுவனர் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.
2003ம் ஆண்டின் போது மனைவி மாயா தேவி இறந்த போதும் தர்மதேவ் குளிக்கவில்லை. அதேபோல, கடந்த ஜூலை 7 அன்று தர்மதேவின் மகன்களில் ஒருவர் இறந்த போதும் அவர் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் இருந்திருக்கிறார் என உள்ளூர் வாசிகள் கூறியதன் மூலம் அறிய முடிகிறது.