பீகார் மாநிலம் பாகல்பூர் சுல்தாங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர், தன்னுடைய ஒரு கை துண்டான நிலையிலும், அந்தக் கையை மற்றொரு கையால் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் பலரும் அஞ்சியபடி நின்றுள்ளனர். அதேநேரத்தில், சிலர் இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ஒருசிலர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கர்புலி டுமார் பகுதியைச் சேர்ந்த ராதேஷ்யாம் யாதவ்வின் மகன் சுமன் குமார் என தெரியவந்துள்ளது. மேலும், அவர் ரயிலில் பயணித்தபோது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அந்தக் கையை மீண்டும் இணைப்பதற்காக மருத்துவமனையைத் தேடிச் சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்தே, அவர் சிகிச்சைக்காக பாகல்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்ற சம்பவம், கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்திலும் நிகழ்ந்தது. அம்மாநிலத்தில் உள்ள கர்கோன் மாவட்டத்தில் உள்ள சித்தோர்கர் - புசாவல் நெடுஞ்சாலையில் தன் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, 4 வயது சிறுமி அதன் சக்கரத்தில் சிக்கி ஒரு கையை இழந்தார். அந்தக் கையை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டர். இந்தச் சம்பவமும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.