ரயில் என்ஜினையே திருடிச் சென்ற பலே திருடர்கள் - 13 சாக்கு மூட்டைகளில் அள்ளிய போலீசார்

ரயில் என்ஜினையே திருடிச் சென்ற பலே திருடர்கள் - 13 சாக்கு மூட்டைகளில் அள்ளிய போலீசார்
ரயில் என்ஜினையே திருடிச் சென்ற பலே திருடர்கள் - 13 சாக்கு மூட்டைகளில் அள்ளிய போலீசார்
Published on

ரயிலில் நடக்கும் திருட்டு சம்பவத்தின் செய்திகளைதான் நாம் பார்ப்பது, படிப்பது வழக்கம். ஆனால் சுரங்கப் பாதை அமைத்து பழுதுப் பார்க்க வைத்திருந்த டீசல் என்ஜினையே கொஞ்சம் கொஞ்சமாக திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் போலீசாரை அதிர வைத்துள்ளது. மேலும் தொடர்ந்து என்ஜினின் உதிரிப் பாகங்கள் உள்பட திருடர்கள் திருடிச் சென்ற இரும்புப் பொருட்கள்,13 சாக்கு மூட்டைகளில் இருந்ததைக் கண்டுப்பிடித்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் கர்ஹரா ரயில் யார்டில் பழுதுப் பார்ப்பதற்காக ரயில் பெட்டிகள், ரயில் என்ஜின்கள் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு அங்கு பழுதுப் பார்ப்பதற்காக அண்மையில் டீசல் என்ஜின் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த டீசல் என்ஜின் காணாமல் போனதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்தப் புகாரின் பேரில், பரவுனி பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருட்டுச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவு போலீசாரையே அதிரவைத்துள்ளது.

கர்ஹரா ரயில் யார்டில் பழுதுப் பார்க்கப்படுவதற்காக வரும் ரயில் என்ஜினின் உதிரிப் பாகங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் உள்ள இரும்புப் பொருட்களை திருடுவதற்காக தனியாக திருடர்கள் சுரங்கம் அமைத்துள்ளனர். பின்னர், அதன் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து என்ஜினை பகுதி பகுதியாகவும், உதிரிப் பாகங்களையும் திருடிச் சென்றது அம்பலமாகியுள்ளது. மேலும் ரயில்வே பாலத்தில் உள்ள நட்டுகள், சின்ன சின்ன துண்டுகள் என இரும்புப் பொருட்களையும் இவர்கள் திருடிச் சென்று முசாஃபர்பூர் மாவட்டம் பிரபாத் நகரில் பழையப் பொருட்கள் வாங்கும் கடையில் விற்று வந்ததும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில் பழையப் பொருட்கள் வாங்கும் கிடங்குக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து கர்ஹரா யார்டிலிருந்து திருடப்பட்ட இரும்புப் பொருட்களை 13 சாக்கு மூட்டைகளில் போலீசார் கைப்பற்றினர். மீட்கப்பட்ட பொருட்களில் என்ஜினின் உதிரிப் பாகங்கள், பழங்கால ரயில் என்ஜின்களின் சக்கரங்கள், காட்சிக்காக வைக்கப்பட்டடிருந்த நீராவி என்ஜின் மற்றும் கனமான இரும்பினால் செய்யப்பட்ட ரயில்வேப் பெட்டிகளின் பாகங்கள் அதில் இருந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கிடங்கின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து திருடர்கள் திருடி வந்தது எப்படி அதிகாரிகள் கண்டுக்கொள்ளமல் இருந்தனர் என்ற கேள்வி எழுந்த நிலைலையில், திருடர்கள் தனியாக திருடினார்களா அல்லது ரயில்வே அதிகாரிகளின் துணையுடன் தான் இந்த திருட்டு நடந்ததா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு, பூர்னியாகோர்ட் ரயில் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நீராவி இன்ஜினை விற்றதாகக் கூறி, சமஸ்திபூர் லோகோ டீசல் கொட்டகையிலிருந்து ரயில்வே பொறியாளர் இடை நீக்கம் செய்யப்பட்டார். சமஸ்திபூர் கோட்ட மெக்கானிக்கல் இன்ஜினியரின் போலிக் கடிதத்தைப் பயன்படுத்தி, மற்ற ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து ரயில்வே பொறியாளர் என்ஜினை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com