பீகார் சிறையில் போலீஸ் சோதனையின் போது, கைதி ஒருவர் செல்போனை கடித்து விழுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. போலீசார் அவ்வப்போது சிறையில் சோதனை செய்து செல்போன், கஞ்சாக்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும் கைதிகளிடம் இதன் பயன்பாடு தொடர்ந்து உள்ளது.
இந்நிலையில், கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில் கடந்த சனிக்கிழமை அன்று போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். கைதி வார்டு, சிறை வளாகம், கைதிகள் புழங்கும் இடங்களில் சல்லடை போட்டு தேடினர். அப்போது குவாஷிகர் அலி என்ற கைதி போலீசாருக்குப் பயந்து, தான் மறைத்து வைத்திருந்த செல்போனை கடித்து மென்று தின்று விழுங்கிவிட்டார். ஆனால், இதன் விளைவு உடனடியாக குவாஷிகர் அலிக்குத் தெரியவில்லை. குவாஷிகர் அலி நேற்று கடும் வயிற்று வலியால் துடித்தார்.
இதையடுத்து, சிறைத்துறை காவலர்கள் உடனடியாக குவாஷிகர் அலியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் குவாஷிகர் அலிக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தபோது வயிற்றில் செல்போன் உதிரிபாகங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக குவாஷிகர் அலி்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் அவரை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் கூறுகையில் “ கைதி குவாஷிகர் அலி வயிற்று வலி தாங்கமுடியாமல் தான் செய்தவற்றை அனைத்தையும் போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து எக்ஸ்ரே எடுத்தோம். அவர் வயிற்றுக்குள் செல்போன் பாகங்கள் இருந்தன. இதையடுத்து, மருத்துவர் சலாம் சித்திக் அறிவுரையின்படி, உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றிவிட்டோம். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
குவாஷிகர் கடந்த 2020ம் ஆண்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 3 வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது