கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து இன்னமும் மீளாத மருத்துவ உலகத்தில் மீண்டும் ஒரு பாலியல் வன்புணர்வு சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில், செவிலியர் கடந்த 10-15 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் குமார் சஞ்சு, வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் குமார் குப்தா மற்றும் மங்க்ரா பகுதியைச் சேர்ந்த அவதேஷ் குமார் ஆகிய மூவரும் மது அருந்திவிட்டு, போதையில் பணியில் இருந்த அந்தப் பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடை எடுத்து டாக்டர் சஞ்சய் குமார் சஞ்சுவின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய அந்த செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து எஸ்பி வினய் திவாரி தலைமையிலான குழு, மருத்துவர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தது.
இதில், காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்காப்புக்காக டாக்டரின் ஆணுறுப்பை பிளேடால் வெட்டியதாக போலீசாரிடம் செவிலியர் தெரிவித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், மருத்துவமனையில் இருந்த ரத்தக்கறை படிந்த பெட்ஷீட்கள், செல்போன்கள் மற்றும் மதுபாட்டில்களைக் கைப்பற்றினர். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.