மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது பாபா சித்திக்கின் படுகொலையைத் தொடர்ந்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதே கும்பல் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி மக்களவை சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ்விற்கும் மிரட்டல் விடுத்துள்ளது.
பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி மக்களவை எம்.பியான பப்பு யாதவ், “லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்துவிடுவேன்” எனப் பேசியிருந்தார். அதாவது, பாபா சித்திக்கின் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு இவ்வாறாகப் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், பப்பு யாதவ்வின் செல்போனைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், “நான் லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய நண்பர். அவருக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம் என உங்களிடம் அறிவுறுத்தச் சொன்னார். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்களைக் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து பப்பு யாதவ், ‘எனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு வேண்டும்’ என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், “எனது உயிருக்கு அச்சுறுத்துதல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் வந்த பிறகும் பீகார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் செயலிழந்துள்ளது. இப்போது எனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு தற்போது 'ஒய்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மதிப்பீடு செய்யப்படும் என்று பூர்ணியா காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேய சர்மா தெரிவித்துள்ளார்.