முகமது நபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் வீடியோவை பார்த்ததால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதன் தொடர்ச்சியாக, அரபு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. அவர் மீது பல மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கும் செய்யப்பட்டுள்ளது.
உதய்பூர் கொலை
இதனிடையே,ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை காரணமாக கூறி, அவரை கடந்த மாதம் இரண்டு பேர் கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அந்த வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னையா லாலை கொலை செய்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிகாரில் அடுத்த சம்பவம்
இந்நிலையில், பிகார் மாநிலம் சீதாமர்கி மாவட்டத்தைச் சேர்ந்த அன்கித் ஜா (23) என்ற இளைஞர் பொது இடத்தில் அமர்ந்து தனது செல்போனில் நுபுர் சர்மாவின் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 4 பேர் இதுதொடர்பாக அன்கித் ஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே, அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து அன்கித் ஜாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுபுர் சர்மாவின் வீடியோவை பார்த்ததன் காரணமாகவே, தான் கத்தியால் குத்தப்பட்டதாக அன்கித் ஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அன்கித் ஜாவின் தந்தை மனோஜ் ஜா அளித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த முகமது பிலால் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை குற்றச்சாட்டு - போலீஸ் மறுப்பு
இதற்கிடையே, நுபுர் சர்மாவின் பெயரை புகாரில் இருந்து நீக்குமாறு போலீஸார் தங்களை நிர்பந்தித்ததாக அன்கித் ஜாவின் தந்தை மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "முன்விரோதம் காரணமாகவே இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. நுபுர் சர்மாவுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.