பீகாரில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில் மோடி பேரிடர் மேலாண் கழக குழுவினரால் படகில் மீட்கப்பட்டார்.
பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாட்னா நகரின் எஸ்.கே. பூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு இதுவரை பொதுமக்களில் 29 பேர் பலியாகி உள்ளனர் என்று பீகார் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று வழங்குவதற்காக 2 ஹெலிகாப்டர்களை உதவிக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய விமான படையிடம் பீகார் அரசு கேட்டு கொண்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரானது இடுப்பளவு வரை சூழ்ந்துள்ளது. பேரிடர் மேலாண் கழக குழுவினர் படகுகளில் சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு பலரை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுசில் மோடி அவரது பாட்னாவில் உள்ள வீட்டில் இருந்து பேரிடர் மேலாண் கழக குழுவினரால் படகில் மீட்கப்பட்டார்.