அன்று கர்ப்பப்பை திருட்டு; இன்று சிறுநீரகம் திருட்டு - பீகாரை உலுக்கும் மருத்துவ மோசடி

தன்னுடைய கிட்னி திருடிய மருத்துவரின் கிட்னியை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை சுனிதா வைத்துள்ளார்.
Bihar medical scam
Bihar medical scamFile Image
Published on

2011-ல் பீகார் மாநிலத்தில் அரங்கேறிய கர்ப்பப்பை திருட்டு சம்பவத்தை அத்தனை எளிதில் மறக்க முடியாது. சமஸ்திபூர், கோபால்கஞ்ச், சரண் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சுமார் 700 பெண்களின் கர்ப்பப்பை மருத்துவர்களால் திருடப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அச்சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் பீகாரின் மருத்துவத்துறையில் அரங்கேறும் மோசடி குறித்த செய்திகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இச்சூழலில், அம்மாநிலத்தில் ஒரு பெண் நோயாளிக்கு தெரியாமல் அவருடைய சிறுநீரகம் மருத்துவர்களால் திருடப்பட்ட சம்பவம் நாட்டை மீண்டும் உலுக்கியுள்ளது. இதில் வருத்தமளிக்கும் செய்தி என்னவென்றால், கர்ப்பப்பை திருட்டிலும் சரி, சிறுநீரக திருட்டிலும் சரி, இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான்.

கர்ப்பப்பை
கர்ப்பப்பை

கர்ப்பப்பைபீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்தவர் சுனிதா தேவி. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சில நாட்களாக வயிற்றுவலி ஏற்படுள்ளது. எனவே அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கு இவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதனால் அவருக்கு 3 செப்டம்பர் 2022 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது இரண்டு கிட்னிகளும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

கிட்னிகள் திருடப்பட்டதை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சுனிதா தற்போது முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கிட்னி திருடப்பட்ட விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் ஜிதேந்திர குமார் பாஸ்வான், ஆர்.கே.சிங் மற்றும் பவன் குமார் ஆகியோர் மீது சுனிதா புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். பின்னர் போலீசில் சிக்கிய அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். தன்னுடைய கிட்னி திருடிய மருத்துவரின் கிட்னியை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சுனிதா வைத்துள்ளார்.

Bihar medical scam
Bihar medical scam

மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அந்த பெண் தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் காலம்தள்ளி வருகிறார். சிறுநீரகம் தானமாக பெற பதிவு செய்துள்ள சுனிதா, 8 மாதங்களாக காத்திருக்கிறார். தற்போது வாரமொருமுறை செய்யப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையால் உயிர் பிழைத்த அவர், மாற்று சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளார்.

சுனிதா தேவிக்கு தேவையான டயாலிசிஸ் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளை மாநில அரசு கவனித்துக் கொள்கிறது. மேலும் சுனிதாவின் 3 பிள்ளைகளுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்றுள்ளது. இதனிடையே எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சுனிதாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முன்வந்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை பரீசிலிக்கப்படாததால் ரூ.5 லட்சம் இழப்பீட்டை பெற மறுத்து விட்டார் சுனிதா.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஜோதி மீனா கூறுகையில் ‘’சுனிதா தவறான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுள்ளார். கர்ப்பப்பை பிரச்சினைக்கு முதலில் மருந்துகள் மட்டுமே எடுத்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்ட கர்ப்பப்பையை மட்டும் அகற்றியிருக்கலாம். முழு கர்ப்பப்பையையும் அகற்றுவது தேவையற்றது” என்கிறார் அவர்.

Bihar medical scam
Bihar medical scam

பெயர் குறிப்பிட விரும்பாத சமஸ்திபூர் மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், "பீகாரில் பதிவு செய்யப்படாத கிளினிக்குகள் மற்றும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கு முன்பு நடந்த கர்ப்பப்பை மோசடியில் கைது செய்யப்பட்ட 33 மருத்துவர்களும் ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். உயிர் காக்கும் மருத்துவர்களை நம்பி நாம் நம்மை முழுதாக ஒப்படைக்கிறோம். ஆனால் இவ்வாறு அவர்கள் திருடுவது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது’’ என்கிறார் அவர்.

இந்தியாவில் உள்ள பெண்களில் பாதி பேர் 35 வயதிற்கு முன்பே கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக தேசிய குடும்ப நல ஆய்வு தரவுகள் காட்டுகிறது. சென்ற டெல்லி ஐஐடி நடத்திய ஆய்வில், பெரும்பாலான பெண்கள் தேவையில்லாமல் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தது. இச்சூழலில்தான், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த எப்ரல் மாதம் மத்திய சுகாதார துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி சமீபத்தில், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைகளை கண்காணிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com