நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து, தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் இப்போது முதல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் முக்கியப் பங்காற்றினார். இதைத் தொடர்ந்து இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும், நான்காவது கூட்டம் டெல்லியிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் I-N-D-I-A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரையே இக்கூட்டணி கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராகவும் நிறுத்துவதற்கு சிலர் ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
I-N-D-I-A கூட்டணியை உருவாக்கியதன் காரணமாக, தாம் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படலாம் என நிதிஷ்குமார் எதிர்பார்த்தார். ஆனால், ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டதும் நிதிஷ் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தேர்வு விஷயத்தில் நிதிஷ்குமாரை, பிற கட்சிகள் புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. I-N-D-I-A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில்தான், அவர் அக்கூட்டணியில் இருந்து விலகி, சமீபத்தில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதல்வரானார். நிதிஷ்குமார் I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகியதை, அக்கூட்டணியிலிருந்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகியது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ”கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் அந்தப் பெயரையே முடிவு செய்தனர் . கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்றுகூடவில்லை. எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இன்றுவரை முடிவு செய்யவில்லை. இதுபோன்ற முரண்களாலேயே, அந்த கூட்டணியிலிருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்தேன். நான் பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் I-N-D-I-A கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் பெயரை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி முன்மொழிந்தார். இதை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், திடீரென குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ’இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைக் கேட்டு முடிவு செய்துகொள்ளலாம்’ எனச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நிதிஷ் குமார், ’I-N-D-I-A கூட்டணியில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ எனத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே அவர் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பீகாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்பூரி தாகூருக்கு, மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதை சமீபத்தில் அறிவித்தது. இந்த விருது அறிவிப்புக்குப் பின்னால் பாஜகவின் அரசியல் இருப்பதாகவே அரசியலாளர்கள் கருதுகின்றனர். கர்பூரி தாகூர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவராகப் பார்க்கப்படுகிறார்.
குறைந்த மக்கள்தொகை கொண்ட 100க்கும் மேற்பட்ட சாதிகளின் குழுக்கள், அச்சமூகத்தில் அடங்கியுள்ளன. இதில் வாக்குச் சதவீதத்தை எந்தவொரு சாதியும் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றும் இணைந்து கூட்டாக 29 சதவீத வாக்குவங்கியைக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால், 2005ஆம் ஆண்டு நிதிஷ்குமாரை முதல்வராக்கியதில் இந்தப் பிரிவினருக்கு முக்கியப் பங்குள்ளது.
இதன் காரணமாக, இந்தப் பிரிவு பீகார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுவதுடன், மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சிகளும் இதன் வாக்குவங்கியைக் குறிவைத்தே தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதன்மூலம் அத்தகைய சாதி ஓட்டுகளை பாஜக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை செய்யக்கூடும் எனக் கணித்திருப்பதாலேயே நிதிஷுகுமார், தற்போது அந்தக் கூட்டணிக்கு தாவியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால், பாஜகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்குவங்கியைக் கவரும் வகையில் இருப்பதால், I-N-D-I-A கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதுதான் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.