பீகார் மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து முதல்வரானார். பின்னர், அடுத்த 2 ஆண்டுகளில் பாஜகவுடனான கூட்டணியை விட்டு விலகிய நிதிஷ், உடனடியாக ஆர்.ஜே.டி. -காங்கிரஸ் - இடதுசாரிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார். சமீபத்தில் இந்தக் கூட்டணியிலிருந்தும் விலகிய நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்து தற்போது மீண்டும் முதல்வராக உள்ளார். அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை கூட்டணிகளை மாற்றி 3வது முறையாக முதல்வராகி இருக்கிறார் நிதிஷ் குமார்.
இந்த நிலையில், மீண்டும் முதல்வரான நிதிஷ் பதவி ஏற்ற நிலையில், அவர் சட்டசபையில் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, பீகார் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக பாஜக எம்எல்ஏ நந்த் கிசோர் யாதவ் நம்பிக்கையில்லா தீர்மனம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மகா கூட்டணி ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்தபோது ஆர்ஜேடி எம்எல்ஏ அத்வா பிஹாரி சௌத்ரி சபாநாயகர் ஆனார். ஆனால், தற்போது அந்தக் கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், பாஜகவுடன் கைகோர்த்ததால், ஆர்ஜேடியைச் சேர்ந்த சபாநாயகருக்கு எதிராக பாஜகவால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆக, நிதிஷ் குமார் அரசு மீது பெரும்பான்மை மற்றும் சபாநாயகருக்கு எதிராக பாஜகவால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகிய இரண்டின்மீதும், இன்று பீகார் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலையில் பீகார் சட்டசபை சபாநாயகர் அத்வா பிகாரி சௌத்ரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பீகார் சட்டப்பேரவை சபாநாயகரை நீக்கும் தீர்மானம் வெற்றி பெற்றது. 125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனை அடுத்து பீகார் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி அடைந்தது. இதையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அத்வா பிகாரி சௌத்ரி நீக்கம் செய்யப்படுவார்.
பின்னர், நிதிஷ் குமார் மீது பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டசபையில் மொத்தம் 243 எம்எல்ஏக்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நிதிஷ் குமார் 129 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்து, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைத்து பாஜகவும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியும் போட்டி போட்டுக்கொண்டு எம்எல்ஏக்களை ரிசார்ட்டுகளில் தங்கவைத்தன. காங்கிரஸ் கட்சி தமது எம்எல்ஏக்களை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அனுப்பிவைத்து பாதுகாத்தது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நிதிஷ் குமாரின் 6 ஜேடியூ எம்எல்ஏக்கள் நேற்றுமுதலே தொடர்பு எல்லைக்குள் அப்பால் இருந்தனர். பீகார் நிதியமைச்சர் விஜய்குமார் சவுத்ரி வீட்டில் நேற்று ஜேடியூ எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் 6 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இவர்களில் சிலர் பீகார் மாநிலத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இவர்களில் சிலரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடத்திவைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் தேஜஸ்வி யாதவ் வீட்டுக்கும் போலீசார் சென்றனர். ஆயினும், வாக்கெடுப்பின்போது, அந்த எம்எல்ஏக்கள் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த வாக்கெடுப்பின்போது ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்களான பிரஹலாத் யாதவ், நீலம் தேவி மற்றும் சேத்தன் ஆனந்த் ஆகியோர் நிதிஷ் குமார் தரப்பு பக்கம் மாறியுள்ளனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.