பீகாரில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கிட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என கூறியிருந்தார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இந்த அறிவிப்பு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கான தடுப்பூசி இலவசம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது அபத்தமானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதையடுத்து, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.
இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி பீகாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட அம்மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பீகார் மாநில துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் கூறுகையில், "கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காக்கும் தடுப்பூசிகளை மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக செலுத்த முடிவு செய்துள்ளோம். ஏனெனில் இது பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான வாக்குறுதியாக இருந்தது. எங்கள் முடிவு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் மாநில மக்களுக்கான ஒரு பெரிய பரிசு.
பீகாரின் மிகப்பெரிய பலம் அதன் மனித வளமாகும். மேலும் உலகம் தொற்றுநோயுடன் போராடுகையில் அவர்கள் கொடிய நோயிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.