காசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் ! மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்

காசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் ! மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்
காசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் ! மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்
Published on

காய்கறிகளை இலவசமாக வழங்காததால் காவல்துறையினர் 14வயது சிறுவன் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக பீகாரில் உள்ள உள்ளூர் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் பட்ராகர் நகர் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடையில் காய்கறிகளை இலவசமாக கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த காய்கறி வியாபாரியின் மகன் இலவசமாக தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து  மாலைவேளையில் சிறுவனின் வீட்டுக்குச் சென்ற காவலர் 14வயது சிறுவனை கைது செய்து அழைத்து சென்றுள்ளார். தற்போது மூன்று மாதமாக அந்த சிறுவன் சிறையில் உள்ளான். 

இதுகுறித்து பேசிய சிறுவனின் தந்தை, ”என் பையனுக்கு 14 வயது தாங்க ஆகுது ஆதார் கார்ட கூட பாருங்க. ஆனா 18 வயசு பையனு கேஸ் போட்டு இருக்காங்க, ஒன்னும் தெரியாத பையன் மேல திருட்டு கேஸ் போட்டிருக்காங்க. என் பையன எந்த ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போனாங்கன்னு கூட முதல்ல தெரியாது. உன் பையனுக்கு திருட்டு பசங்க கூட தொடர்பு இருக்கு அவன் மேல திருட்டு வழக்கு போட்டு இருக்கோம்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. எங்களுக்கு ஒன்னுமே புரியல அதுக்கப்புறம் தான் எங்க பையன ஜெயில்ல போய் பார்த்தோம். அவன் நடந்தத எங்கிட்ட சொன்னான். கடைக்கு வந்த போலீஸ்காரர் இலவசமாக காய்கறி கேட்டதும் இவன் கொடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்கான் அதனால கோபமான போலீஸ்காரர் பொய் கேஸ் போட்டு கைது பன்னியிருக்கார். போலீஸ்காரங்க இவன அடிச்சு வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கியிருக்காங்க. போலீஸ்காரங்க சொன்ன இரண்டு பேருக்கு என் பையனுக்கும் எந்த தொடர்பும் இல்ல. அவங்க யாருன்னு கூட தெரியாது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பாட்னா ஐ.ஜி.நய்யார் ஹஸ்னைன் கான், ”வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு வருவதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ளவை” என்றார். இந்நிலையில் இந்த விவகாரத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com