இந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்
காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில், போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலுக்குத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியாக தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த சண்டையில், இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 7 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து ராணுவத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை தொடர்ந்து மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தோம். காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. 10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.