தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனையானது மிகச்சிறப்பாக செயலாற்றி வருகிறது. தனியார் மருத்துவமனையில் பல லட்சங்கள் கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையானது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அல்லது மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு பயன்படும் வகையில் அரசாங்கம் செய்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமொன்று, ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் AIIMS மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 9 வயதுடைய சிறுவன், நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட வலிக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவக்குழு சிறுவனின் இடது பக்க நுரையீரலில் 4 செ.மீ அளவுள்ள கூர்மையான தையல் ஊசி ஒன்று இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கமான முறைப்படி இதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததால், அதிநவீன சிகிச்சை முறையான ப்ரோன்கோஸ்கோபி (bronchoscopy) என்ற சிகிச்சை (கேமரா பொருந்திய மெலிதான குழாயின் மூலம் முக்கு அல்லது வாய் வழியாக செய்யப்படும் சிகிச்சை) மூலமாக சிறுவனின் நுரையீரலில் இருந்த ஊசியை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து தற்பொழுது சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.
சிறுவனுக்கு இத்தகைய சிகிச்சையை மேற்கொண்ட குழந்தைகள் நல மருத்துவர்களான ராஷ்மி ராஜன் தாஸ், கெரிஷ்னா எம் குல்லா, கேட்டன், ராமகிருஷ்ணா ஆகியோருக்கு தங்களின் வாழ்த்துகளையும் மருத்துவமனை கூறியிருக்கிறது.