பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்தவர் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த கர்பூரி தாக்கூர். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் நாயக் (JAN NAYAK) என அதாவது மக்களின் நாயகன் எனப் போற்றப்படும் கர்பூரி தாக்கூர், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக அரும்பணியாற்றியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஓதுக்கீட்டு முறையை தன்னுடைய பதவிக்காலத்தில் அமல்படுத்தியவர் கர்பூரி தாக்கூர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 26 மாதகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்த கர்பூரி தாக்கூர், பீகாரின் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றவர்.
கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.