ஹோலி பண்டிகை குறித்து பாரத் மேட்ரிமோனி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் BOYCOTT BHARAT MATRIMONY என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
திருமண வரம் தேடும் இணையதளமான பாரத் மேட்ரிமோனி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி
பண்டிகைகள் கொண்டாட வேண்டும் எனவும் பாரத் மேட்ரிமோனியின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இது சர்ச்சையாக வெடித்த நிலையில், பாரதிய ஜனதாவை சேர்ந்த வழக்கிறஞர் அஷூடோஷ் துபே பாரத் மேட்ரிமோனி இந்து பண்டிகைகளை குறிவைத்து ட்வீட் செய்வதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பிற மத பண்டிகைகளின் போது வாழ்த்து தெரிவிக்கும் பாரத் மேட்ரிமோனி, இந்து பண்டிகைகளின் போது மட்டும்
பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
இதையடுத்து #BOYCOTTBHARATMATRIMONY என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஹோலி பண்டிகையை கொச்சைப்படுத்தும் நோக்கில் பாரத் மேட்ரிமோனி இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.