கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது. மலப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய விஷயம்தான் தற்போது, அதிகமானோரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்நிகழ்வில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், “சில நிகழ்ச்சிகளில், சில சங் பரிவார தலைவர்கள் மக்களிடம் ‘பாரத் மாதா கி ஜெய்’ எனக் சொல்லச்சொல்வதை கேட்கிறோம். இந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? சங் பரிவாரிகளுக்கு இது தெரியுமா என தெரியவில்லை. அவரது பெயர் அசிமுல்லா கான். இவர் சங்பரிவார் தலைவர் இல்லை என்பது சங்பரிவாரிகளுக்கு தெரியுமா என எனக்குத் தெரியவில்லை. இவர் 19 ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேஷ்வா நானா சாகேப்பின் பிரதம மந்திரியாக இருந்தவர். பாரத் மாதா கி ஜெய் என்ற வார்த்தையை அவர்தான் உருவாக்கினார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமியர் ஒருவர் உருவாக்கிய கோஷம் என்பதால், சங்பரிவாரிகள் இனிமேல் அம்முழக்கத்தை உபயோகிக்க வேண்டாம் என முடிவெடுப்பார்களா என தெரியவில்லை. எனவே, நான் கூறவிரும்புவது என்னவெனில், இஸ்லாமியர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என கூறும் சங்பரிவாரிகள் வரலாற்றை புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் சில விஷயங்களை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், ஜெய் ஹிந்த் என்ற புகழ்பெற்ற வார்த்தையை உருவாக்கியவர் அபித் ஹசன் சஃப்ரானி (Abid Hasan Safrani) என்றும் சாரே ஜஹான் சே அச்சா (Saare jahan se accha) பாடலுக்கு இசையமைத்தவர் என்றும் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், “நாட்டின் சுதந்திரத்திற்கு மற்றபிரிவு மக்களைப் போலவே இஸ்லாமியர்களும் பெரும்பங்கு வகித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.