பாரத் ஜோடோ நியாய யாத்திரா மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அசாம் மாநிலத்தில் தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 833 கிலோமீட்டர் தூரம் அசாம் மாநிலத்திற்குள் பயணித்து அருணாச்சல் பிரதேச மாநிலத்தை அவரது நடைபயணம் அடையவுள்ளது.
முன்னதாக அசாம் மாநிலத்தின் முக்கிய நகரமான கௌகாத்தி நகருக்குள் ராகுல் நடைபயணம் மேற்கொள்ள அசாம் காவல்துறை அனுமதி மறுத்தது. அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்த் பிஷ்வா சர்மா, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
இதனிடையே, கவுகாத்தியில் ராகுலின் வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. காவல்துறையின் தடுப்புகளை காங்கிரஸ் தொண்டர்கள் தூக்கி எறிந்ததால், ராகுல் காந்தியின் கண் முன்னே தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
ராகுல்காந்தி மற்றும் கேசி வேணுகோபால் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் மீது வன்முறை, ஆத்திரமூட்டல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அசாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ராகுல்காந்தி கூறுகையில், “கவுஹாத்தியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பஜ்ரங்தளம் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்கள் யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இன்று அசாமின் பார்பேட்டவில் இருந்து தனது யாத்திரையை தொடங்கினார். முன்னதாக யாத்திரை தொடங்கப்படுவதற்கு முன் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “அசாம் முதல்வர் எப்போதும் வெறுப்பைப் பரப்பி உங்கள் நிலங்களைப் பறிக்கிறார். மிகவும் ஊழல் நிரம்பிய முதலமைச்சர்.
என்னை வழக்கு போட்டு மிரட்டலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வசர்மாவிற்கு எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை. எத்தனை வழக்குகள் போடமுடியுமோ அத்தனை வழக்குகள் போடுங்கள். என்னை மிரட்ட முடியாது.
அசாமின் மொழி கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அழிக்க முயல்கிறது. நாக்பூரில் இருந்துப் அசாமை இயக்க அவர்கள் முயலுகிறார்கள். நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.