என்.சி.ஈ.ஆர்.டி அமைப்பால் பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவிற்கு வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த குழுவானது சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதில், இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது என்றும், காலனி ஆதிக்க அடையாளங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற சொல்லைப் பயன்படுத்த பரிந்துரைப்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில் உள்ள 8 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளனர். இக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து என்.சி.ஈ.ஆர்.டி. விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
இந்து மதம் சார்ந்த படையெடுப்பு, இந்து மதம் சார்ந்த தாக்குதல்கள் எல்லாம் எப்படி இருந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என்றும், காலனியாதிக்கத்தின் காரணமாக என்னென்ன அடையாளங்களை எல்லாம் நாடு இழந்ததோ அது எல்லாம் கல்வி முறைகளில் கொண்டுவரப்பட வேண்டும். பண்டைய கலாச்சாரங்கள் குறித்த புரிதல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் போன்ற பரிந்துரைகளை அந்த குழு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. உயர்மட்டக்குழு கொடுக்கும் பரிந்துரைகளை என்.சி.ஈ.ஆர்.டி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.