மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதிக்கும் என்று தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசியதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், புதன்கிழமை மீண்டும் மத்திய அரசு - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று 'பாரத் பந்த்'- நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பல மாநிலங்களிலும் ஆதரவு இருந்தது. தமிழகத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டும் வீடியோ தொகுப்பு இது...
கரூர், உசிலம்பட்டி, நீலகிரி, சிவகங்கை: இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அத்தியாவசிக கடைகளை தவிர 3000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர் இளையான்குடி ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
புதுச்சேரி: புதுச்சேரியில் 25,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆட்டோக்கள் டெம்போக்கள் ஆகியவை இயக்கப்படவில்லை.
திருவாரூர், திருத்துறைபூண்டி, மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, புதுக்கோட்டை, நாகை மற்றும் தேனி: திருவாரூர் திருத்துறைபூண்டி, மயிலாடுதுறை, விழுப்புரம் ஈரோடு, புதுக்கோட்டை, நாகை மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் 10,000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பால் மற்றும் மருந்துக்கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மஹாராஷ்ட்ரா, மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, விசாகபட்டினம்: விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்ட்ரா, மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் ரயில் மறியல். ஆந்திர மாநிலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பாம்பன்: பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் பரம்பரிய விசைபடகு மீனவர்கள் மற்றும் பெண்கள் கையில் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாகவும் சைதையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை: போராடத்திற்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. எம்.எல்.ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூர், திருச்சி: கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
யார் யார் ஆதரவு? - தேசிய அளவில் காங்கிரஸ், சாமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தெலுக்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வடபழனி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் அரசு பணிமனைகளின் முன்பாக வாயிற் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்துகள் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தன.
நாடுமுழுவதும் பேராட்டத்திற்கு ஆதரவு: வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சாலையில் ஆடிப்பாடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அமைதியான முறையில் பாரத் பந்த்தை நிறைவு செய்த விவசாயிகள்!