Bharat Bandh Updates: டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!

Bharat Bandh Updates: டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!
Bharat Bandh Updates: டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!
Published on

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த 3 மணி வரையிலான அப்டேட்ஸ் இங்கே..

டிச.08, நேரம் 2.24 PM: டெல்லி சரோஜினி நகர் சந்தையில் கடைக்காரர்கள் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில் வாடிக்கையாளர்களின் கைகளில் கருப்பு ரிப்பன்களைக் கட்டி ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். இதுகுறித்து கடைக்காரர் ஒருவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதை செய்கிறோம். விவசாயிகளின் எளிய கோரிக்கையை அரசால் ஏன் ஏற்க முடியாது” என கேள்வி எழுப்பினார்.

டிச.08, நேரம் 1.34 PM: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சியினரும், மக்கள் அதிகாரம், தொழிலாளர் முன்னேற்ற கழகம், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் மட்டுமின்றி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், சோமரசம்பேட்டை, புள்ளம்பாடி, லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

டிச.08, நேரம் 1.30 PM: டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pics courtesy: The Indian Express

டிச.08, நேரம் 1.05 PM: சண்டிகரின் செக்டர் -17 பிளாசாவில் பாரத் பந்த் அழைப்புக்கு ஆதரவாக பெண் தொண்டர்கள் குழு கடைக்காரர்களை அவர்களின் கடைகளை மூடுமாறு கேட்டுக்கொள்கிறது.

டிச.08, நேரம் 1.05 PM: செஞ்சியில் தள்ளு முள்ளு... விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக கூட்டணி கட்சி சார்பில் வேளாண்மை மசோதா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து காந்தி பஜார் வழியாக நான்குமுனை சந்திப்பில் 500-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மமக, SDPI, மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு கூட்டு சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் நான்கு சாலைகளிலும் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. செஞ்சி துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலன் அளிக்காததால் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, போலீசார் மற்றும் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நான்கு முனை சந்திப்பு பரபரப்புடன் காணப்பட்டது.

டிச.08, நேரம் 12.25 PM: பாம்பனில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடைபெற்றது.

டிச.08, நேரம் 12.22  PM: விவசாயிகளுக்கு ஆதரவாக வேலைநிறுத்த போராட்டம்- சென்னை நிலவரம்

டிச.08, நேரம் 12.01  PM: குஜராத்: டயர்களை எரித்ததற்காக காங்கிரஸ் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். (புகைப்படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

டிச.08, நேரம் 11.59 AM: வதோதராவில் டயர்களை எரித்து தேசிய நெடுஞ்சாலையை காங்கிரஸ் தொழிலாளர்கள் தடுத்தனர். புகைப்படம்(டைம்ஸ் ஆஃப் இந்தியா)

டிச.08, நேரம் 11.52 AM: மேற்கு வங்கம்: பாரத் பந்த் போராட்டத்தின் போது இடதுசாரிகள் தெருக்களில் கால்பந்து விளையாடுகிறார்கள். புகைப்படம் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)


டிச.08, நேரம் 11.48 AM: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லூதியானாவில் வங்கிகள் மூடல்..! புகைப்படம்(தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

டிச.08, நேரம் 11.40 AM: டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்த நிலையில் அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. 

டிச.08, நேரம் 11.38 AM: திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்! உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை! #StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

டிச.08, நேரம்10.50 AM: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விரிவாக வாசிக்க > பாரத் பந்த்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான கடைகள் அடைப்பு! 

நாடு முழுவதும் இன்று பந்த்! எப்படி காட்சியளிக்கிறது சென்னை தி.நகர்?

2020 டிச.08, நேரம் 10.39 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக மயிலாடுதுறையில் 10,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு!

2020 டிச.08, நேரம் 10.38 AM: கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த இடங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்ல உள்ள நிலையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

2020 டிச.08, நேரம் 10.22 AM: புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அங்கு நடைபெறும் போராட்ட களத்திற்கு நேரில் வந்த புதுச்சேரி முதல்வர், போராட்டத்தை அமைதியான முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துமாறு அறிவுறுத்தினார்.

2020 டிச.08, நேரம் 10.12 AM:புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

விவசாயிகளின் 'பாரத் பந்த்'...களத்தில் செய்தியாளர்கள்! > விரிவான கவரேஜ்...

டிச.08, 10.00 AM: திருவாரூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விளக்குடி, முத்துப்பேட்டை, கட்டிமேடு, ஆலத்தம்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிச.08, 09.32 AM: மகாராஷ்டிரா மாநிலம் பல்தானா அருகே மல்காபூரில் ரயிலை நிறுத்தி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். 

டிச.08, 09.22 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருவாரூர்- நாகை- புதுக்கோட்டை இடையே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

டிச.08, 09.00 AM: புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இன்று காலை முதல் ஆட்டோக்கள், பேருந்துகள், இயங்கவில்லை. புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், டீக்கடைகள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com