டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் சந்தித்த நிலையில் அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். முன்னதாக விவசாய பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசிற்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அங்கு 13 ஆவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக நேற்று டெல்லி - ஹரியானா எல்லை பகுதியான சிங்கு பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி ட்வீட் செய்துள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி,
“ டெல்லி எல்லையில் போராட்டம் நடந்தி வரும் விவசாயிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்த நிலையில் அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். முதல்வரின் வீட்டைச் சார்ந்தவர்களும் வீட்டை விட்டு உள்ளேயும், வெளியேயும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என பதிவிட்டுள்ளனர். ஆம் ஆத்மியின் டிவிட்டைத் தொடர்ந்து பலரும் வீட்டுக்காவலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டனர்.
இது குறித்து பதிலளித்துள்ள டெல்லி வடக்கு ஆணையர் அல்போன்ஸ் “ அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைக்கவில்லை. அவர் எங்கு வேண்டுமோ செல்லலாம்” என்று கூறியுள்ளார்.