ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன. இதில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் முதல்வராகப் பதவியேற்றனர். எனினும், பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
இதையடுத்து, இந்த 3 மாநிலங்களிலும் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதல்வரைத் தேர்வுசெய்ய பாஜக, தலைமை மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, பழங்குடியின தலைவரான விஷ்ணுதியோ சாயும், மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவும், ராஜஸ்தானில் பஜன்லால் சர்மாவும் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதில் விஷ்ணுதியோ சாயும், மோகன் யாதவும் ஏற்கெனவே அம்மாநிலங்களில் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், ராஜஸ்தானில் இன்று (டிச.15) பஜன்லால் சர்மா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பஜன்லால் சர்மா தனது 56வது பிறந்த நாளான இன்று, முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இன்று, ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
முதல்வராக பதவியேற்றுள்ள பஜன்லால் சர்மா, முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ராஜஸ்தானின் பரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இளம்வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் முக்கிய பதவிகளை வகித்தார். அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். முதல்வர் பஜன்லால் சர்மா, பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.