நொய்டாவைச் சேர்ந்த ஜெஸ்ஸி அகர்வால் என்ற 26 வயதுப் பெண், படித்து முடித்த பின்பு பெங்களூருவில் தங்கி, ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பல ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது பேசுபொருளானது. அந்த வகையில், இவருக்கும் வேலை பறிபோயுள்ளது. தொடர்ந்து வேலை கிடைக்காததால், லேப்டாப்களை திருடுவதென முடிவெடுத்துள்ளார். அதற்காக பெங்களூருவில் பணியாற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் தங்கி, அங்கிருந்து லேப்டாப்களைத் திருடிச் சென்று, சொந்த ஊரில் விற்றுள்ளார்.
லேப்டாப்களைத் திருடி விற்பதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்ற அவர், தொடர்ந்து அதே வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தங்கும் விடுதிகளில் ஆளில்லாத அறைகளுக்குள் நுழைந்து, அங்கு சார்ஜ் போட்டு வைத்திருக்கும் லேப்டாப்களைத் திருடி வந்துள்ளார். இந்த நிலையில்தான், தங்கும் விடுதியில் இருந்து அடிக்கடி லேப்டாப்கள் திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரினைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை நடத்தி ஜெஸ்ஸியை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 24 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.