செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் பெங்களூரு டி.ஜே.ஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனக நகரை சேர்ந்தவர் ரூபா (27). இவர் தனது கணவருடன் தான் தங்கியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் வேலை செய்து கொண்டிருந்தள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் கிடந்த சோப் மீது ரூபா கால் வைத்துள்ளார். இதனால் கால் வழுக்கி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த அவர், கட்டடத்தின் சுவரை பிடித்தபடி கூச்சலிட்டுள்ளார்.
இந்நிலையில், அவருடைய கணவர் விரைந்து வந்து ரூபாவின் கைகளை பிடித்து கொண்டார். இதனால் ரூபா, மொட்டை மாடியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது கை நழுவி ரூபா கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரூபாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கோமா நிலையில் ரூபா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே ரூபா மொட்டை மாடியில் இருந்து தவறி விழுவது மற்றும் அந்தரத்தில் தொங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.