டிராஃபிக்கை சாக்காக வைத்து திருமணமான அடுத்த நாளே மனைவியை விட்டு கணவன் தப்பிச் சென்ற சம்பவம் பெங்களூருவில் அண்மையில் நடந்திருக்கிறது.
நாட்டிலேயே டெக் நகரமாக கொண்டாடப்படும் பெங்களூரு மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறித்து அறியாதோரே அரிதுதான். ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடக்கவே ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையே பெங்களூருவில் இருக்கும்.
அப்படிப்பட்ட டிராஃபிக்கை பயன்படுத்தி புதிதாக திருமணமான கணவன் ஒருவர் தனது மனைவியை விட்டு தப்பியோடியிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்திருக்கிறது. இது குறித்து கடந்த மார்ச் 5ம் தேதி அந்த மனைவி போலீசிடமும் புகாராக கொடுத்திருக்கிறார்.
சிக்கபலாபூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அந்த மணமகன் மஹாதேவபுரா பகுதியில் கார் டிராஃபிக்கில் சிக்கிய நேரம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார். அவர் பின்னாலேயே மணப்பெண் துரத்திச் சென்றும் வீணாகியிருக்கிறது.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியிருக்கும் அந்த பெண் கூறியதாவது, “திருமணத்துக்கு முன்பே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததையும், அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஸ் மற்றும் வீடியோவை பொதுவெளியில் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியதாக கூறியிருக்கிறார்.
இதனை என்னிடம் கூறியதும், அந்த உறவில் இருந்து மொத்தமாக விலகி வந்துவிட்டதாகவும் கூறினார். ஆனால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆகையால் அவருக்கு ஆதரவாக இருப்பேன் என நானும் உறுதியளித்து திருமணம் செய்துக்கொண்டோம்.
தற்போது அந்த பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து ஓடிவிட்டார். எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் மீண்டு வருவார் என நம்புகிறேன்.” என திருமணமான பெண் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, கோவாவில் உள்ள ஒரு பெண்ணுடன் ஜார்ஜ் என்ற அந்த நபருக்கு பழக்கவழக்கம் இருந்திருக்கிறார்.
அவருடைய இந்த உறவை அறிந்த குடும்பத்தினரிடம் அதனை கைவிட்டு விடுவதாக சொன்ன பிறகே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கல்யாணமான மறுநாளே தப்பியது ஜார்ஜ் இன்னும் அந்த பெண்ணின் பிடியில் இருந்து வெளியேறவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.