மும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்களை பொருத்த பெங்களூரு போலீசாரும் திட்டமிட்டுள்ளனர்.
தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதால் ஏற்படும் ஒலி மாசை கட்டுப்படுத்த மும்பை போலீசார் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினர்.
அதன்படி, மும்பை நகரின் முக்கிய சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனுடன் சிக்னல் காத்திருப்புக்கான கவுண்ட் டவுன் நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. சிவப்பு சிக்னல் இருக்கும்போது அடிக்கப்படும் தேவையற்ற ஹாரன்களால் டெசிபல் அளவு 85-ஐ தாண்டினால் சிவப்பு சிக்னலின் காத்திருப்பு நேரம் தானாகவே அதிகரிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் மேலும் காத்திருக்க வேண்டும். மீண்டும் ஹாரன் அடித்தால் மீண்டும் காத்திருக்க வேண்டும். இதனால் ஒலி மாசு குறைந்திருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்களை பொருத்த பெங்களூரு போலீசாரும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள பெங்களூரு காவல் ஆணையர், ''மும்பை அளவுக்கு பெங்களூருவில் ஒலி மாசு இல்லை என்றாலும், சாலைகளில் ஒழுக்கத்தை கடைபிடிக்க இந்த நடைமுறை உதவும். அதனால் முக்கிய சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தும் நடைமுறையை கொண்டு வர உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தின்படி பெங்களூரு அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. பெங்களூரு மக்கள் கடந்த வருடத்தில் 10 நாட்கள், 3 மணி நேரத்தை சாலைகளில் காத்திருப்பதற்காக செலவழித்து இருக்கிறார்கள் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.