“சூதுகவ்வும்” பட பாணியில் கடத்தல் : டவர் இன்றி தவித்த ஐடி ஊழியர்

“சூதுகவ்வும்” பட பாணியில் கடத்தல் : டவர் இன்றி தவித்த ஐடி ஊழியர்
“சூதுகவ்வும்” பட பாணியில் கடத்தல் : டவர் இன்றி தவித்த ஐடி ஊழியர்
Published on

ஐடி ஊழியர் ஒருவர் 40 நிமிடங்களாக கடத்தப்பட்டு, பின்னர் அவரிடம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.

பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் மனோஜ்குமார் (28). இவர் பணி முடிந்த பின்னர் நேற்றிரவு 11 மணியளவில், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள், இவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர். அவர்களின் பேச்சு முரணாக இருக்கவே, அங்கிருந்து செல்ல மனோஜ் முயன்றுள்ளார். அதற்குள் அந்த கும்பல் அவரை காருக்குள் பிடித்து இழுத்துள்ளது. மனோஜ் கூச்சலிட முயன்றபோது, கத்தியைக்காட்டி அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

பின்னர் அங்கிருந்து மனோஜை அழைத்துக்கொண்டு பயணம் செய்துள்ளனர். பயணத்தின் போது, எவ்வளவு பணம் உள்ளது எனக்கேட்டு, இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துள்ளனர். அத்துடன் மனோஜ் அணிந்திருந்த நகைகளையும் பறித்துள்ளனர். பின்னர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் வாங்கியுள்ளனர். இதற்கிடையே மனோஜ் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவர் செல்போனில் டவர் இல்லாததால், அவரால் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தப் பயணம் சுமார் 40 நிமிடம் சென்றுள்ளது. பின்னர் அந்தக் கும்பல் மனோஜை சாலை ஓரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். நேராக காவல்நிலையம் சென்ற மனோஜ் நடந்ததை கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் சொன்ன அடையாளங்கள் மற்றும் வண்டி எண் ஆகியவற்றின் அடிப்படையில், 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com