மாதவிடாய் காலத்தில் ஊக்கத்தொகையுடன் 2 நாள் ஊதிய விடுப்பு: இப்படியொரு நிறுவனமா?

மாதவிடாய் காலத்தில் ஊக்கத்தொகையுடன் 2 நாள் ஊதிய விடுப்பு: இப்படியொரு நிறுவனமா?
மாதவிடாய் காலத்தில் ஊக்கத்தொகையுடன் 2 நாள் ஊதிய விடுப்பு: இப்படியொரு நிறுவனமா?
Published on

பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை கொண்ட இரண்டு நாள் விடுப்பை அறிவித்துள்ளது.

பெண்களுக்கு மாதந்தோறும் வரும் இயற்கையான உபாதை மாதவிடாய். சுழற்சி முறையில் வரும் மாதவிடாய் காரணமாக பெண்கள் அந்தக் குறிப்பிட்ட நாள்களில் உடல்ரீதியான சிரமங்களை கடப்பார்கள். உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படும். அந்தக் காலத்தில் சில பெண்களுக்கு மனச்சோர்வும், அதிக கோபமும் ஏற்படும் என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்து. ஆனால் உழைக்கும் பெண்கள் பலரும் மாதவிடாய் காலத்தில் சொல்ல முடியாத துன்பத்தை கடந்து செல்வார்கள்.

பெண்களின் கர்ப்ப காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் சட்டம் இருப்பதால் அதற்கு மட்டும் தனியார் நிறுவனங்கள் விதிவிலக்கு அளித்திருக்கின்றனர். ஆனால் மாதந்தோறும் பெண்கள் கடக்கும் மாதவிடாய் காலத்தை பெரும்பாலான அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ கண்டுக்கொள்வதில்லை. பெண்களும் சிரமங்களை சுமந்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் பணிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரை மையமாக வைத்து செயல்படும் "Horses Stable News" என்ற செய்தி இணையதளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் சேர்த்து ரூ.250 ஊக்கத் தொகையுடன் 2 நாள்கள் விடுப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் கல்யாணமான ஆண்களுக்கும் மாதம் ஒரு முறை தங்களது மனைவியை மாதவிடாய் காலத்தில் உடனிருந்து கவனித்துக்கொள்வதற்கான விடுப்பையும் வழங்கி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

இது குறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" இதழுக்கு Horses Productions நிறுவனத்தின் இணை நிறுவனர் சலோனி அகர்வால் கூறும்போது "மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி, தசைப் பிடிப்பு பெண்களுக்கு ஏற்படும். ஆனாலும் வேறு வழியின்றி பலரும் பணியாற்றும் சூழல் ஏற்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது சலுகையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நிறுவனத்தின் வேலைப் பார்க்கும் ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் சரிசமமான உரிமை வழங்குகிறோம்".

மேலும் தொடர்ந்த அவர் "அதேபோல திருமணமான ஆண்களுக்கும் தங்களது மனைவியை உடனிருந்து கவனிக்கும் வாய்ப்பை வழங்குகிறோம். இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இது பல நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும். மேலும் மாதிவிடாய் குறித்த கண்ணோட்டமும் இதன் மூலம் மாறும் என நம்புகிறோம்" என்கிறார் சலோனி அகர்வால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com